புதன், 2 செப்டம்பர், 2020

குகனை சந்திக்கும் இராமர்...!


அனுமன், பரதனிடம் பெருமானே! நான் வாயுக்குமாரன் குரங்கினத்தைச் சேர்ந்தவன். வாயு பகவானுக்கும், அஞ்சனா தேவிக்கும் பிறந்தவன். அதன்பின் அனுமன் தன் விஸ்வரூபத்தை காண்பித்தான். அனுமனின் இந்த உருவத்தைக் கண்டு சத்ருக்கனும் மற்றவர்களும் அஞ்சி நடுங்கினார்கள்.

பிறகு அனுமன் அவர்களை பார்த்து, இது தான் என் உண்மையான உருவம் என்றான். அங்கு இருந்தவர்கள் பயப்படுவதைப் பார்த்த அனுமன் தன் உருவத்தை சிறியதாக மாற்றிக் கொண்டான். அதன் பின் பரதன், அனுமனே! அண்ணல் வந்துவிட்டார் என்னும் சுபச்செய்தியை கூறியதால் உனக்கு பல பரிசுகளை தர விரும்புகின்றேன். பிறகு பரதன், அனுமனுக்கு விலையுயர்ந்த பொன்னும், பொருளும், இரத்தினமணிகளும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தான்.

பரதன் தம்பியிடம்! தம்பி சத்ருக்கனா! அண்ணல் இராமர் வந்திவிட்ட செய்தியை முரசறைந்து அறிவிக்கச் சொல். அயோத்தியையும் அலங்கரிக்கச் சொல் எனக் கட்டளையிட்டார்.

சத்ருக்கன் இச்செய்தியை சுமந்திரரிடம் கூறினான். சுமந்திரர் இச்செய்தியை முரசறைந்து அறிவிக்கும்படி வள்ளுவனிடம் கூறினான். பரதனின் கட்டளைப்படி நாடு முழுவதும் இராமரின் வருகையை முரசறைந்து அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.

அவரவர் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர். அயோத்தி நகரமே மகிழ்ச்சி கடலில் திளைத்தது. பரதன் அனுமனிடம், நாங்களும் உன்னுடன் வந்து அண்ணலை வரவேற்க விரும்புகிறோம் என்றான். பரதனின் தவிப்பை அறிந்த அனுமன் சம்மதித்தான்.

அயோத்தி மக்களும், முனிவர்களும், இராமரின் அன்னை கௌசலை உட்பட்ட மூன்று தாய்மார்களும், சத்ருக்கனும், இராமரை அழைத்து வரச் செல்ல தயாராக இருந்தனர். பரதன், இராமரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டு இராமரை எதிர்நோக்கி அழைத்து வர புடைசூழச் சென்றான். போகும் வழியில் பரதன் அனுமனிடம், நீ அண்ணல் இராமரை முதலில் எங்கு சந்தித்தாய் என்பதை விரிவாக கூறு எனக் கேட்டான்.

அனுமன், நான் எம்பெருமான் இராமரை ருசியமுக பருவதத்தில் சந்தித்தேன் என்றான். அதன் பின் அனுமன், வாலியின் வதத்தையும், இராவணனனின் வதத்தையும், விபீஷணனுக்கு பட்டாபிஷகத்தை செய்ததையும் அதன்பின் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு தங்கியிருந்ததை பற்றியும் விரிவாக கூறினான்.

அப்பொழுது சூரியன் எழ தொடங்கினான். அங்கு பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில், இராமர் பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் இருந்தார். பிறகு இராமர் பரத்வாஜ முனிவரிடம் இருந்து விடைப்பெற்று அங்கிருந்து புஷ்பக விமானத்தில் சென்றனர்.

புஷ்பக விமானம் கங்கை கரையை அடைந்தது. இராமர், கங்கை கரையில் இறங்கி குகனை சந்தித்தார். குகன், ஸ்ரீராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். இராமர், குகனை தன் மார்புடன் அன்பாக தழுவிக் கொண்டார்.

இராமர் குகனை பார்த்து, தம்பி! நீ எவ்வாறு இருக்கின்றாய். உன் சுற்றமும் அனைவரும் நலமாக இருக்கிறார்களா? எனக் கேட்டார். குகன், எம்பெருமானே! தங்களின் அருளால் நாங்கள் எந்தவிதக் குறையின்றி மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றான். ஆனால் இலட்சுமணரை போல் எங்களால் உங்களுக்கு துணையாக இருந்து சேவை செய்ய முடியவில்லை என்ற குறை தான் உள்ளது என்றான்.

இதைக் கேட்டு இராமர், எனக்கு இலட்சுமணனும், நீயும் வேறுவேறு அல்ல எனக் கூறி குகனை சமாதானம் செய்தார். குகன் இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். பிறகு குகன் சீதையிடமும், இலட்சுமணனிடமும் ஆசிப் பெற்றான்.

பிறகு இராமர், குகனை, சுக்ரீவன், அங்கதன் முதலானவர்களுக்கு அறிமுகம் செய்தார். இராமர், இவன் பெயர் குகன். வேடர்களின் தலைவன். நற்குணத்தில் சிறந்தவன் என்றார். பிறகு சுக்ரீவனும், விபீஷணனும் குகனை அன்போடு தழுவிக் கொண்டனர்.

அதன் பின் இராமர் குகனிடம் இருந்து விடைப்பெற்று அயோத்தியை நோக்கி புஷ்பக விமானத்தில் பறந்தனர். இராமர், விமானத்தில் இருந்து விபீஷணன், சுக்ரீவன், அங்கதன் முதலானவர்களுக்கு கண்ணுக்கு எட்டிய அயோத்தி நகரை காண்பித்து, அதோ அயோத்தி நகரம் தெரிகிறது பாருங்கள் என்றார்.

அனுமன், புஷ்பக விமானத்தை பார்த்தார். உடனே பரதரிடம், பரதரே அதோ! பாருங்கள் அண்ணல் இராமர், இலட்சுமணர், சீதை வரும் புஷ்பக விமானம் என்றார். பரதர், அந்த விமானத்தை பார்த்து வணங்கினார். இராமரை பார்த்த அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அனுமன், உடனே பறந்துச் சென்று இராமர் முன் வணங்கி நின்றான். அனுமன் இராமரிடம், எம்பெருமானே! தங்களின் கட்டளைப்படி நான் நந்தி கிராமத்திற்குச் சென்று, தங்களின் வருகையை காணாமல் தீக்குளிக்க முயன்ற பரதரை தடுத்து நிறுத்தினேன்.

தங்களின் வருகையை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். இதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பரதர், உடனே அயோத்தி நகரை அலங்கரிக்குமாறு கட்டளை அருளினார் என்றான். இராமர் அனுமனை பார்த்து, அனுமனே! எனக்கு துன்பம் நேரும்போது தக்க சமயத்தில் நீ எனக்கு உதவி செய்துள்ளாய். நீ என்றும் மகிழ்ச்சி உடன் வாழ்வாயாக எனக் கூறி வாழ்த்தினார்.

அனுமன் இராமரிடம், பரதரும், சுற்றமும் தங்களை எதிர்நோக்கி அழைத்து வர என்னுடன் வந்துள்ளார்கள் எனக் கூறி பரதர் மற்றும் சுற்றத்தாரை காண்பித்தான். இராமர், பரதரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். உடனே இராமர் புஷ்பக விமானத்தை தரையில் இறங்கும்படி வேண்டினார். புஷ்பக விமானம் தரையில் இறங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்