சித்தப்பிரமை கொண்டவளைப் போல் அப்படியும் இப்படியும் பார்த்துத் திருதிருவென்று விழித்துக் கொண்டு மணிமேகலை உள்ளே வந்தாள். வானதி கூறியதைப்போல் அவளுடைய தோற்றம் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. அழுது அழுது அவளுடைய முகமும் கண்ணிமைகளும் வீங்கிப் போயிருந்தன.
ஆயினும் எக்காரணத்தினாலோ குந்தவைக்கு அவள் மீது இரக்கம் உண்டாகவில்லை. சமீப காலத்தில் சோழ குலத்துக்கு ஏற்பட்ட விபத்துக்களுக்கெல்லாம் கடம்பூர் சம்புவரையர் மாளிகையிலே நடந்த சதியாலோசனைதான் ஆதி காரணம் என்பதை அவளால் மறக்க முடியவில்லை. கடைசியாக வீராதி வீரனான தன் தமையன் கரிகாலன் அவளுடைய வீட்டிலேதான் கொலையுண்டு மாண்டான் என்னும் எண்ணமும் அவளுக்கு ஆத்திரமூட்டிக் கொண்டிருந்தது.
சட்டென்று, இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. இவளுடைய தமையன் கந்தமாறனும், வாணர் குலத்து வீரரும் பழைய சினேகிதர்கள். அந்தச் சிநேகத்தை முன்னிட்டுத்தான் வந்தியத்தேவர் கடம்பூர் மாளிகைக்குச் சென்றிருந்தார். அங்கே நடந்த சதியாலோசனையைப் பற்றி அறிந்து வந்து சொன்னார். கந்தமாறன் தன் சகோதரியை வல்லத்து இளவரசருக்கு மணம் செய்து கொடுக்கும் உத்தேசமும் ஒரு காலத்தில் கொண்டிருந்தான். அந்தப் பெண் இவளாகத்தான் இருக்கவேண்டும்!...
இந்தச் செய்தி நினைவு வந்ததும், குந்தவைக்கு மணிமேகலையின் மீது ஒரு புதிய சிரத்தை உண்டாயிற்று. ஆகா! இவள் எதற்காகத் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள்? தந்தைக்காகவும் தமையனுக்காகவும் முறையிடுவதற்கு வந்திருக்கிறாளா? சம்புவரையர் மாளிகைக்குத் தன் தமையன் கரிகாலனை அழைத்த போது, அவனுக்கு இப்பெண்ணை மணம் செய்து கொடுக்கும் பிரஸ்தாபமும் செய்யப்பட்டது. கரிகாலனிடம் ஒருவேளை இந்தப் பேதைப் பெண் தன் உள்ளத்தைச் செலுத்தியிருப்பாளா? தான் மணக்க நினைத்தவன் அகால மரணமடைந்ததால் இவள் சித்தம் கலங்கி விட்டதா? அதைப்பற்றி ஏதேனும் சொல்ல வந்திருக்கிறாளா? அல்லது... அல்லது.. ஒருவேளை அப்படியும் இருக்கக் கூடுமா? கந்தமாறன் தன் சிநேகிதனைப்பற்றி இவளிடம் சொல்லித்தானிருக்க வேண்டும். வந்தியத்தேவர் இவள் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். முன்னால் ஒரு தடவை இருந்திருக்கிறார். இப்போது அதிக நாள் தங்கி இருந்திருக்கிறார். இவள் மனம் ஒருவேளை வந்தியத்தேவரிடம் ஈடுபட்டிருக்குமோ? அப்படியானால், அவர் இவளை நிராகரித்திருப்பார் என்பதில் ஐயமில்லை, அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இல்லாத பொல்லாத பழிகளையெல்லாம் அவர் மீது சுமத்த வந்திருக்கிறாளா?...
இவ்வளவு எண்ணங்களும் அதி விரைவாகக் குந்தவையின் உள்ளத்திரையில் தோன்றி மறைந்தன. மணிமேகலையின் நெஞ்சத்தை ஊடுருவி அதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவள் போல் குந்தவை உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் மணிமேகலை தலை குனிந்தாள். அவளுடைய கண்களிலிருந்து இரண்டு கண்ணீர்த் துளிகள் தரையில் சிதறி விழுந்தன.
'பெண்ணே! நீ ஏன் கண்ணீர் விடுகிறாய்? உன் தமையன் இன்னும் உயிரோடுதானே இருக்கிறான்? என் தமையன் அல்லவா உங்கள் மாளிகையில் படுகொலை செய்யப்பட்டு இறந்தான்? அழுதால், நான் அல்லவோ அழ வேண்டும்? ஆனால் என்னைப் பார்! நான் அழவில்லை, கண்ணீர் விடவும் இல்லை, மறக் குலத்து மாதர்கள் வீர மரணம் அடைந்தவர்களைக் குறித்து அழுவது வழக்கமில்லை!' என்றாள் குந்தவை.
மணிமேகலை இளைய பிராட்டியை நிமிர்ந்து நோக்கி, 'தேவி! என் அண்ணன் வாள் முனையில் இறந்திருந்தால் நானும் அழமாட்டேன். ஆனால் இறந்தவர்...இறந்தவர்' என்று மேலே சொல்லத் தயங்கி விம்மினாள்.
குந்தவை தான் முதலில் சந்தேகித்தது தான் உண்மையாயிருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினாள். இவள் ஆதித்த கரிகாலனிடம் தன் நெஞ்சைப் பறி கொடுத்திருக்கக் கூடும். அதைச் சொல்லத் தயங்குகிறாள் போலும்! ஐயோ, பாவம்! அப்படியானால் இவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதுதான்.
'பெண்ணே! நெஞ்சைத் திடப்படுத்திக் கொள். மனத்தில் உள்ளதைத் தைரியமாகச் சொல்லு! இறந்து போனவன் உன் தமையன் அல்ல. என் அண்ணன் தான். அதற்காக நீ ஏன் அழவேண்டும்? ஒருவேளை உங்கள் வீட்டில் விருந்தாளியாக வந்திருந்த போது இப்படியாகி விட்டதே என்று நினைத்து வருந்துகிறாயாக்கும்! அதற்கு நீ என்ன செய்வாய்? வீட்டில் பெரியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பொறுப்பு அவர்களுடையதே..."
'இல்லை, தேவி, இல்லை! பொறுப்பு என்னுடையது தான்! அதனாலேயே எவ்வளவு அடக்கிப் பார்த்தும் என் துயரத்தை அடக்க முடியவில்லை. என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதும் நிற்கவில்லை. இந்தக் கையில் பிடித்த கத்தியினால் அந்த வீராதி வீரரைக் கொன்றேன் என்று எண்ணும்போது என் நெஞ்சம் வெடித்துச் சிதள் சிதளாகி விடும்போல் இருக்கிறது..."
குந்தவை தேவி திடுக்கிட்டவளாய், 'பெண்ணே! இது என்ன பிதற்றுகிறாய்? உனக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டதா?" என்றாள்.
'இல்லை, இல்லை! எனக்குச் சித்தப் பிரமை இல்லை, பிடித்தால் இனிமேல்தான் பிடிக்கவேண்டும். உண்மையில் நடந்ததையே சொல்கிறேன். ஆதித்த கரிகாலரைக் கொன்றவள் இந்தப் பாதகி தான். தங்களிடம் உண்மையைச் சொல்லித் தக்க தண்டனை பெறுவதற்காகவே வந்தேன்..."
'சீச்சீ! இது என்ன அவதூறு? வீராதி வீரனாகிய என் தமையன், ஒரு பெண்ணின் கையால் கொலையுண்டதாக என்னை நம்பச் சொல்கிறாயா? இம்மாதிரி சொல்லும்படி உனக்கு யார் கற்பித்துக் கொடுத்தார்கள்..."
'ஒருவரும் கற்பித்துக் கொடுக்கவில்லை! தேவி! நான் சொல்லுவதை யாரும் நம்பக்கூட மறுக்கிறார்கள். என் தமையனும், தந்தையும் கூட நான் சொல்வதை ஒப்புக் கொள்ளவில்லை."
'ஏன் வீண் கதை சொல்லுகிறாய்? அவர்கள்தான் உனக்கு இவ்விதம் சொல்லும்படி கற்பித்திருக்க வேண்டும் அல்லது நீயே உன்னுடைய தந்தையையும், தமையனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கற்பனை செய்து கொண்டு வந்தாய் போலும்!"
'தேவி! அவர்களை ஏன் நான் காப்பாற்ற முயல வேண்டும்? என் விருப்பத்துக்கு விரோதமாக அவர்கள் என்னை மணம் செய்து கொடுக்கப் பார்த்தார்கள். முதலில் 'மதுராந்தகத் தேவரைக் கட்டிக்கொள்" என்றார்கள். பிறகு திடீரென்று ஆதித்த கரிகாலரை அழைத்து வந்து 'இவரைத் தான் நீ மணந்து கொள்ள வேண்டும். மணந்து கொண்டால் சோழ சிங்காதனம் ஏறுவாய்!" என்றார்கள். அப்படி என்னைப் பலி கொடுக்கப் பார்த்தவர்களுக்காக நான் பரிந்து ஏன் வர வேண்டும்? அவர்கள் செய்த குற்றத்தை நான் செய்ததாக ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? இல்லவே இல்லை!" என்று கூறினாள் மணிமேகலை.
'பெண்ணே! நீ சொல்லுவது ஒன்றைவிட ஒன்று விசித்திரமாயிருக்கிறது. என் தமையன் கரிகாலனை மணந்து கொள்ளும் பாக்கியத்துக்காக எத்தனையோ ராஜாதிராஜாக்களின் குமாரிகள் தவங்கிடந்தார்கள். அப்படியிருக்க உன் தந்தையும் தமையனும் உன்னைப் பலி கொடுக்க விரும்பியதாக நீ சொல்லுவது ஏன்? சோழர் குலத்தில் வாழ்க்கைப்படுதல் அவ்வளவு பயங்கரமான துன்பம் என்று நீ கருதியது ஏன்?"
'தேவி! எனக்குக் கூடப் பிறந்த தமக்கையோ, தங்கையோ, யாரும் இல்லை. தங்களையே என்னுடைய உடன் பிறந்த சகோதரியாக நினைத்துச் சொல்கிறேன்..." என்றாள் மணிமேகலை.
'என் தமையனைக் கொன்றதாகச் சொல்லுகிறாய். என்னுடன் சகோதரி உறவு கொண்டாட எப்படித் துணிகிறாய்?" என்று இளைய பிராட்டி சற்றுக் கடுமையாகக் கேட்டாள்.
'எனக்கு அந்த உரிமை உண்டு. தங்கள் சகோதரர் கரிகாலர் என்னைக் கூடப் பிறந்த சகோதரியாக எண்ணினார். அவ்வாறு தம் கைப்பட எழுதியும் இருக்கிறார். அதை நினைக்கும் போதுதான் அவரை நான் கொல்லும்படி நேர்ந்தது குறித்து என் உள்ளம் துடிக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் என்னவென்று கேட்பதற்காகவே தங்களிடம் வந்தேன்!" என்று கூறிவிட்டு மீண்டும் விம்மினாள் மணிமேகலை.
இளைய பிராட்டி வானதியிடம் மெதுவான குரலில், ' பாவம்! இந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே சித்தப்பிரமை தான் போலிருக்கிறது. இந்தச் சமயத்தில் இவளை அழைத்துக் கொண்டு வந்தாயே? திடீரென்று வெறி முற்றி விட்டால் என்ன செய்கிறது?" என்றாள்.
வானதி, 'அக்கா! எனக்கும் கவலையாகத்தானிருக்கிறது. தயவு செய்து கோபமாகப் பேசாதீர்கள். நல்ல வார்த்தையாகப் பேசி அவளை திருப்பி அனுப்பி விடுவோம்!" என்றாள்.
குந்தவை மணிமேகலையைப் பார்த்து, 'பெண்ணே! நடந்தது நடந்துவிட்டது. எல்லாம் விதியின் செயல்! வருத்தப்படாதே! என்னை உன் தமக்கையாகவே நீ பாவித்துக் கொள்ளலாம். ஏதோ சொல்லவேண்டும் என்றாயே? அது என்ன? அல்லது நீ விரும்பினால் இன்னொரு சமயம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்!" என்றாள்.
'இல்லை, இல்லை இப்போதே சொல்லி விடுகிறேன். அக்கா! தாங்கள் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஆகையால், நான் சொல்வதைத் தெரிந்து கொள்வீர்கள். புருஷர்களிடம் எவ்வளவு சொன்னாலும் அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. ஒரு பெண் தன் உள்ளத்தை ஒருவனுக்குக் கொடுத்து விட்டாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர் கையில் ஆயுதம் ஒன்றுமின்றி நிராதரவாக இருக்கும் போது, இன்னொருவன் கையில் பெரிய வாளை எடுத்துக் கொண்டு அவரைக் கொல்லப் போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்தப் பெண் உண்மையான அன்புள்ளவள் என்றால், என்ன செய்வாள்? பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாளா...?"
குந்தவைக்கு உடனே மந்தாகினியின் நினைவு வந்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் துளித்தது. 'அது எப்படிச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பாள்? குறுக்கே சென்று தன் உயிரைக் கொடுத்தாவது தன் காதலனுடைய உயிரைக் காப்பாற்ற முயன்றிருப்பாள்!"
இதைக் கேட்ட மணிமேகலை, 'ஆகா! இந்த மாதிரி யோசனை சொல்ல யாரும் இல்லாமற் போய்விட்டார்களே. அந்தப் பாதகி பழுவூர் நந்தினியின் யோசனையைக் கேட்டல்லவா மோசம் போய்விட்டேன்? என்னைத் தன் உடன் பிறந்த சகோதரியாக பாவித்து, என் காதலருக்கு மணம் செய்து வைக்கவும் எண்ணியிருந்த உத்தமரை இந்தப் பாவியின் கைகளால் கொன்றுவிட்டேனே?" என்று சொல்லி விம்மினாள்.
இளைய பிராட்டி குந்தவை தேவி திரும்பி வானதியைப் பார்த்து, 'வெறி முற்றிக் கொண்டு வருகிறது!" என்று மெல்லிய குரலில் கூறினாள்.
பின்னர், மணிமேகலையை நோக்கி, 'பெண்ணே! அழ வேண்டாம்! நடந்தது என்னவென்று சொல்லு! இல்லாவிட்டால் இன்னொரு சமயம் சொல்லுகிறாயா?" என்றாள்.
'இல்லை, இல்லை, இப்போதே சொல்லி விடுகிறேன் அக்கா! என் தமையன் கந்தமாறன் வெகு காலமாகத் தன் சிநேகிதர் ஒருவரைப்பற்றி எனக்குச் சொல்லி வந்தான். அவர் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் கடம்பூரில் உள்ள எங்கள் மாளிகைக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே என் நெஞ்சம் 'இவர்தான் என் நாயகர்" என்று தீர்மானித்து விட்டது..."
இளைய பிராட்டி குரலில் சிறிது நடுக்கத்துடனேயே, 'அப்படி உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாக்கியசாலி யார்?" என்று கேட்டாள்.
'அவரைப் பாக்கியசாலி என்றா சொல்கிறீர்கள்! இல்லை, இல்லை. என் உள்ளம் அவரிடம் சென்றபோது, என் துரதிர்ஷ்டமும் அவரைப் பிடித்துக்கொண்டது. இன்று இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையின் பாதாளச் சிறையில் அவர் அடைபட்டுக் கிடக்கிறார். அக்கா! பழுவேட்டரையர் வீட்டுப் பெண்கள் சொன்னார்கள். இந்தக் கோட்டையிலுள்ள பாதாளச் சிறை ரொம்பப் பயங்கரமாக இருக்குமாமே? அதற்குள் அடைப்பட்டவர்கள் திரும்ப உயிரோடு வருவதில்லையாமே?" என்றாள்.
'அதெல்லாம் பொய், பெண்ணே! நானும் இதோ நிற்கும் வானதியும் பாதாளச் சிறைக்குச் சில காலத்துக்கு முன்பு கூடப் போயிருக்கிறோம்.."
'தேவி! நான் பாதாளச் சிறைக்குப் போக முடியுமா? ஒரு தடவை அவரைப் பார்க்க முடியுமா?"
'அவர் யார் என்று நீ இன்னும் சொல்லவில்லை பெண்ணே!"
'அவர் வாணர் குலத்து இளவரசர். பெயர் வந்தியத்தேவர்!" குந்தவையும் வானதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வானதி இப்போது குறுக்கிட்டு, 'அவரைப்பற்றி உனக்கு என்ன இவ்வளவு கவலை? அவருக்கும் உனக்கும் என்ன உறவு?" என்று கேட்டாள்.
மணிமேகலை வானதியைப் பார்த்து, 'நீ யார் அதைக் கேட்பதற்கு?" என்று ஆத்திரமாய்க் கூறினாள்.
உடனே தணிவடைந்து, 'கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ கொடும்பாளூர் இளவரசி வானதி அல்லவா? உன்னுடைய பெரிய தகப்பனார் தானே இன்று இக்கோட்டையின் அதிபதியாக இருக்கிறார்? உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒரு வரம் கொடு! உன் பெரிய தகப்பனார் பெரிய வேளாரிடம் சொல்லி வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்! அவருக்குப் பதிலாக என்னைப் பாதாளச் சிறையில் போடச் சொல்லு! இளவரசர் கரிகாலரைக் கொன்ற பாதகி நான்! என் குற்றத்தை நானே ஒப்புக்கொள்ளும் போது, இன்னொருவர் பேரில் குற்றம் சுமத்துவது என்ன நியாயம்? தேவி! தங்களையும் அடிபணிந்து கேட்டுக்கொள்கிறேன். கொடும்பாளூர் பெரிய வேளார் நியாயம் செய்யாவிட்டால், தங்கள் தந்தை சக்கரவர்த்தியிடம் நேரில் முறையிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்றாள் மணிமேகலை.
குந்தவையின் உள்ளம் பல உணர்ச்சிகளால் அலைகடல் போலக் கொந்தளித்தது. வந்தியத்தேவரைப் பாதாளச் சிறையில் போய்ப் பார்ப்பதற்குக் கூட தயங்கிக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்ணோ வந்தியத்தேவரிடம் கொண்ட காதல் நிமித்தமாகக் கொலைக் குற்றத்தையே ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறாள்! ஆனால் இவள் கூறுவதில் எவ்வளவு உண்மை? எவ்வளவு கற்பனை? காதலனைக் காப்பாற்றுவதற்காக இப்படிக் கற்பனை செய்து கூறுகிறாளா? ஒருவேளை நந்தினியின் துர்ப்போதனையைப் பற்றிக் கூறினாளே, அதனால் மதிமயங்கி இவளே அக்கொடிய செயலைச் செய்திருக்கவும் கூடுமா?
இல்லை, இல்லை. இவளால் அந்தப் பாதகத்தைச் செய்திருக்க முடியாது. வந்தியத்தேவரைக் கொலைக் குற்றத்திலிருந்து தப்புவிப்பதற்கே இவ்விதம் சொல்லுகிறாள். இவள் பேசும் விதத்திலிருந்து இது நன்கு தெரிகிறது. இவள் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள். இவள் பேச்சை நம்பி வந்தியத்தேவரை விடுதலை செய்யவும் மாட்டார்கள். ஆனாலும், இவளிடமிருந்து இன்னும் ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும். கரிகாலனுடைய அகால மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பது நிச்சயம். அதை இந்தப் பெண்ணின் மூலமாக வெளதப்படுத்த முடியுமா?
'மணிமேகலை! உன் நெஞ்சின் உறுதியைப் பாராட்டுகிறேன். உன் காதலனைக் காப்பாற்றும் பொருட்டு நீ உன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள முன் வந்ததைப் பாராட்டுகிறேன். இம்மாதிரி அரிய செயல்களைக் கதைகளிலும் காவியங்களிலும் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். உன்னைப் பற்றிக் கவிபாடுவதற்குச் சங்கப் புலவர் யாரும் இந்த நாளில் இல்லாமற் போய்விட்டார்கள். ஆனால் உன் வார்த்தையை நான் நம்பினாலும் மற்றவர்கள் நம்ப வேண்டுமே? கரிகாலருடைய உயிரற்ற உடம்புக்குப் பக்கத்தில் வந்தியத்தேவர் இருந்ததாக உன் தந்தையும், தமையனும் சொல்லுகிறார்களே? அவர்கள் பேச்சை நம்புவார்களா? உன் வார்த்தையை நம்புவார்களா? உன் வார்த்தையை நம்புவதற்கு இன்னொரு தடையும் இருக்கிறது. வல்லத்து இளவரசரை நான்தான் அவசரமாக என் தமையனிடம் அனுப்பினேன். கடம்பூருக்குப் போகாமல் தடுத்து விடும்படி சொல்லி அனுப்பினேன். அப்படிப் போனாலும் கரிகாலனை விட்டு ஒரு கணமும் பிரியாமலிருந்து அவனுக்குப் பாதுகாப்பாயிருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அன்றியும் கரிகாலனின் மெய் காவற்படையைச் சேர்ந்தவர் வல்லத்து இளவரசர். கரிகாலன் மரணமடையும்போது இவர் அருகில் இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் அவனைக் காப்பாற்றவில்லை. ஆகையினால் கடமையில் தவறிவிட்டவராகிறார். தம் உயிரைக் கொடுத்தாவது கரிகாலனுடைய உயிரை இவர் காப்பாற்றியிருக்க வேண்டும். இவரே கொல்லவில்லை என்று ஏற்பட்டாலும், கடமையில் தவறியதற்குத் தக்க தண்டனை உண்டல்லவா?"
'தேவி! அவர் தமது கடமையில் சிறிதும் தவறவில்லை."
'அதற்கு உன் வார்த்தையைத் தவிர வேறு என்ன அத்தாட்சி இருக்கிறது?"
'இதோ அத்தாட்சி இருக்கிறது! தங்கள் தமையனாரின் எழுத்து மூலமான அத்தாட்சியே இருக்கிறது!' என்று கூறிக்கொண்டே மணிமேகலை தன் இடையில் செருகியிருந்த ஓலை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.
குந்தவை அளவில்லா ஆர்வத்துடன் அந்த ஓலையைப் படித்தாள். ஆம்; ஆதித்த கரிகாலரின் சொந்தக் கையெழுத்துத்தான் அது. வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவனே எழுதியிருக்கிறான். குந்தவைக்குத்தான் முகவரியிட்டு எழுதியுள்ளான்.
என் அருமை சகோதரியார், சக்கரவர்த்தித் திருமகளார், இளைய பிராட்டியார் குந்தவை தேவிக்கு, ஆதித்த கரிகாலன் எழுதியது. எத்தனையோ காலமாக எனக்கு இரவில் தூக்கம் கிடையாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கொடிய பாவம் செய்தேன். சரணாகதி அடைந்த பகைவனைக் கொன்றேன். அவனும் அவனுக்காக உயிர்ப்பிச்சை கேட்டவளும் என்னை வருத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னை நிம்மதியாகத் தூங்கவிடுவதில்லை.
இன்று அதிகாலையில் தூக்கமில்லாமல் வெளியே வந்த போது வால் நட்சத்திரம் விழுந்து மறைவதைக் கண்டேன். என் உடம்பிலிருந்தும் ஏதோ அச்சமயம் போய்விட்டது. இப்போது வெறும் கூடு மாத்திரமே இருக்கிறது. சகோதரி! இந்தத் துர்நிமித்தம் என்னோடு போகட்டும். நம் அருமைத் தந்தைக்கும், அருள்மொழிக்கும் ஒன்றும் நேராமல் ஏகாம்பரநாதர் காப்பாற்றட்டும்.
நானும் நீயும் நம் இளம்பிராயத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் உன்னதத்தைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டோ ம். அவற்றை என்னால் நிறைவேற்றக் கூடவில்லை. என் தம்பி நிறைவேற்றுவான். அவன் மூன்று உலகையும் ஆளப்பிறந்தவன். அவனுக்கு வல்லத்திளவரசன் வந்தியத்தேவன் துணையாக இருப்பான். தேவி! வந்தியத்தேவன் நீ இட்ட பணிகளை நன்கு நிறைவேற்றினான் என்று அறிந்து திருப்தி அடைந்தேன். இல்லாவிடில் அவனை இங்கே இவ்வளவு முக்கியமான காரியத்துக்கு அனுப்பியிருக்க மாட்டாய். என்னை, என் விதியிலிருந்து காப்பாற்ற அனுப்பியிருக்க மாட்டாய்.
சகோதரி! இங்கே எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், அதற்கு என் விதியும் என் பிடிவாதமும்தான் பொறுப்பே தவிர வந்தியத்தேவன் பொறுப்பு அல்ல. நீ சொல்லி அனுப்பியபடி அவன் இந்த கடம்பூர் மாளிகைக்கு வராமல் தடுக்க எவ்வளவோ முயன்றான். இந்த மாளிகைக்கு வந்த பிறகு நிழலைப் போல என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். அதற்காகவே இந்த வீட்டுப் பெண் மணிமேகலையைச் சிநேகம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய உதவியினால் நான் போக உத்தேசித்திருக்கும் இடத்துக்கு முன்னதாகவே போய் ஒளிந்து கொண்டிருக்கிறான். எல்லாம் என்னைக் காப்பாற்றுவதற்காகத்தான். ஆனால் விதியிலிருந்தும், வினை வசத்திலிருந்தும் ஒருவர் இன்னொருவரைக் காப்பாற்ற முடியுமா?
படம் எடுத்து ஆடும் நாக சர்ப்பத்தின் மோகன சக்தியினால் கவரப்பட்ட சிறிய பிராணிகள் தாங்களே வலியச் சென்று அப்பாம்புக்கு இரையாகி மடியும் என்று கேள்விப்பட்டிருப்பாய். அம்மாதிரியே நானும் நந்தினியிடம் போகிறேன். அவள் நம் சகோதரி என்று எனக்கு எச்சரிக்கை அனுப்பியிருக்கிறாய். அதை நம்ப முடியவில்லை. ஆயினும் அவள் விஷயமான மர்மம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதை அறிந்து கொள்வதற்கே போகிறேன். எப்படியும் இன்று உண்மையை அறிந்து கொள்வேன்.
என் விதி என்ன ஆனாலும், வந்தியத்தேவன் பேரில் குற்றம் யாதுமில்லை. அவன் உன் கட்டளையைச் சரிவர நிறைவேற்றி வருகிறான். சகோதரி! அந்த மாயமோகினி நந்தினியின் வலையில் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் அடியோடு விழுந்து விட்டார்கள். அப்படி விழாமல் தப்பிப் பிழைத்தவன் வந்தியத்தேவன் ஒருவன்தான். அவனுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வீட்டில் மிகச் சூடிகையான பெண் ஒருத்தி இருக்கிறாள். என் உடன் பிறந்த சகோதரியைப் போல் அவள் பேரில் எனக்குப் பிரியம் உண்டாகிவிட்டது. மணிமேகலையை வந்தியத்தேவனுக்குத் திருமணம் செய்வித்தால், அவனுக்கு நல்ல பரிசாக இருக்கும். ஆனால், சகோதரி, உனக்கு இது சம்மதமாக இருக்குமோ, என்னமோ தெரியாது.
என் அருமைத் தங்காய்! இந்த ஓலையை அந்தப் பெண்ணிடந்தான் ஒப்புவிக்கப் போகிறேன். நல்லவேளையாக அவளுக்குப் படிக்கத் தெரியாது. அவளைக் குறித்து உன் விருப்பம் எப்படியோ அப்படிச் செய்! நம் குடும்பத்தில் நீயே மிகச் சிறந்த அறிவாளி. உன் வார்த்தையை நான் தட்டி நடந்தேன். அதன் பலனை அனுபவிக்கப் போகிறேன். தம்பி அருள்மொழியாவது உன் யோசனைப்படி நடந்து சோழ சாம்ராஜ்யத்தை மகோந்நத நிலைக்குக் கொண்டு வருவானாக...
இந்த இடத்தில் எழுந்து நின்று போயிருந்தது. ஓலையைப் படித்து முடிக்கும்போது குந்தவையின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. கண்களைச் சட்டென்று துடைத்துக் கொண்டு, மணிமேகலையைப் பார்த்து, 'பெண்ணே! இந்த ஓலை உன்னிடம் எப்படி வந்தது? யார் கொடுத்தார்கள்?" என்று கேட்டாள்.
'தேவி! இளவரசரே என்னிடம் கொடுத்தார், அவரைப் பற்றி நந்தினி என்னவெல்லாமோ தவறாகச் சொல்லியிருந்தாள். ஆகையால் எனக்குத்தான், காதல் ஓலை எழுதியிருக்கிறார் என்று முதலில் நினைத்துக் கொண்டேன். இதைத் தீயில் போட்டுப் பொசுக்கிவிட எண்ணினேன். பிறகு என்னதான் எழுதியிருக்கிறார் என்று பார்க்கலாம் என்று நினைத்துப் பத்திரப்படுத்தி வைத்தேன். என் தோழி சந்திரமதியிடம் கொடுத்துப் படித்துக் காட்டச் சொன்னேன். என்னைத் தம் உடன் பிறந்த சகோதரி என்று எழுதியிருக்கும் வீர புருஷரை இந்தக் கைகளினால் கொன்று விட்டேன் என்று எண்ணும் போது என் நெஞ்சு துடிக்கிறது. தேவி! படுகொலை செய்த பாதகிக்கு என்ன தண்டனை உண்டோ அதை எனக்குக் கொடுக்கும்படி செய்யுங்கள்!" என்று வேண்டினாள் மணிமேகலை.
அவளுடைய பரபரப்பும், அவள் பேசிய விதமும், அவள் இதைக் கற்பனை செய்து சொல்லுகிறாள், வந்தியத்தேவரைக் காப்பாற்றுவதற்காகச் சொல்லுகிறாள் என்பதை நன்கு வெளிப்படுத்தின. குந்தவை அதை அறிந்து கொண்டாள். ஆயினும் அவள் கொண்டு வந்த ஓலை கற்பனை அல்ல. அது கரிகாலரின் சொந்த எழுத்து. வந்தியத்தேவரைச் சிறை மீட்கவும் பயங்கரமான கொலைக் குற்றம் அவர் மீது சாராமல் தடுக்கவும் இந்த ஓலையே போதும். இந்தப் பெண் வாயை மூடிக் கொண்டிருந்தால் ரொம்ப அனுகூலமாயிருக்கும். ஆனால் எப்படி இப்பெண்ணைச் சும்மா இருக்கப் பண்ணுவது?
'மணிமேகலை! இன்னமும் கரிகாலரை நீ தான் கொன்றதாகச் சாதிக்கிறாயா?" என்று கேட்டாள்.
'ஆம், தேவி!"
'இந்த ஓலையைப் படிக்கச் சொல்லிக் கேட்டதாகச் சொல்கிறாய். இதில் உன்னை உடன் பிறந்த சகோதரி என்று கரிகாலன் குறிப்பிட்டிருக்கிறான். அவ்வளவு உன் மேல் பிரியம் வைத்திருந்தவனை நீ எதற்காகக் கொல்ல வேண்டும்?"
'ஓலையை முன்னதாகப் படித்திருந்தால், அந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்திருக்க மாட்டேன். அவருடைய மனத்தை அறியாமல் செய்து விட்டேன். அந்த வஞ்சகி நந்தினியும் என் மனத்தைக் கெடுத்து வைத்திருந்தாள்."
'எந்த விதத்தில் கெடுத்திருந்தாள்?"
'வந்தியத்தேவர் மீது கரிகாலர் துவேஷம் கொண்டிருப்பதாகவும் அவரைக் கொன்றாலும் கொன்றுவிடுவார் என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அதற்குத் தகுந்தாற் போல கரிகாலரும் கையில் வாளை தூக்கிக் கொண்டு, 'எங்கே அந்த வந்தியத்தேவன்? அவனை இதோ கொன்றுவிடுகிறேன்!" என்று கூத்தாடவே, நான் உண்மையென்று நம்பிவிட்டேன். உடனே என் கையிலிருந்த கத்தியினால்...."
'பெண்ணே! இந்தப் பேச்சை விட்டுவிடு. வீராதி வீரனாகிய ஆதித்த கரிகாலனை ஓர் அபலைப் பெண் கொன்றாள் என்பதை நான் நம்பினாலும் உலகம் நம்பவே நம்பாது."
'தேவி! வேறு யார் கொன்றிருக்க முடியும்? கரிகாலருடைய உடல் கிடந்த இருட்டறையில் வந்தியத்தேவரும் நானும் மட்டுமே இருந்தோம். அவர் கொல்லவில்லை. பின்னே, நான்தானே கொன்றிருக்க வேண்டும்?"
'நீ இப்படிச் சொல்வதினால் இறந்து போன என் தமையனுக்கு அபகீர்த்தி உண்டாக்குகிறாய். மேலும் இன்னொன்று யோசித்துப் பார்! வாணர் குலத்து இளவரசர் நீ கொலைக் குற்றம் செய்தாய் என்பதை ஒப்புக் கொண்டு சும்மா இருப்பாரா? நீ அவரைக் காப்பாற்ற விரும்புவது போல் அவர் உன்னைக் காப்பாற்ற விரும்ப மாட்டாரா? நீ பிடிவாதமாகச் சொல்வது போல் அவரும் 'நான் தான் கொன்றேன்" என்பார். நீ பெண் என்பதற்காக உன்னை ஒருவேளை மன்னித்து விடுவார்கள். அவரை மன்னிக்க மாட்டார்கள். இராஜ குலத்தினரைக் கொன்ற துரோகிகளுக்கு எவ்வளவு பயங்கரமான தண்டனை விதிக்கப்படும் என்று உனக்குத் தெரியும் அல்லவா? நாற்சந்தியில் நிறுத்தி வைத்து..."
இதைக் கேட்ட மணிமேகலை 'ஓ"வென்று அழுது விட்டாள். தேம்பி அழுதுகொண்டே, 'அக்கா! தாங்கள் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்!" என்று கதறினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக