Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 செப்டம்பர், 2020

ஸ்ரீவேணுகோபால சுவாமி. உத்தமர்சீலி


இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் திருச்சியில் இருந்து கல்லணை செல் லும் வழியில், சுமார் 10 கி.மீ தொலைவில், காவிரிக் கரையையொட்டி அமைந்துள்ளது உத்தமர்சீலி. அழகும் அமைதியும் தவழும் இந்தத் தலத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால சுவாமி. இவரது எழிற் கோலத்தைத் தரிசிக்க கண்ணிரண்டு போதாது!

இந்தக் கோயிலைக் கரிகாலன் கட்டிய தாகவும், இந்தத் தலத்தில்தான் கரிகாலன், மைத்ரேய மகரிஷியிடம் கல்லணை கட்டுவதற்கான ரகசியங்களை உபதேசமாகப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

கோயிலின் முகப்பில், ஆதிசேஷன் மீது சயனநிலையில் மகாலட்சுமி சமேதராக அருளும் திருமால், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு உள்ளே சென்றதும் ஒரு கையை உயர்த்தி நம்மை ஆசீர்வதிக்கும் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். அவருக்கு அருகிலேயே விநாயகரும் காட்சி தருவது கூடுதல் விசேஷம்.

கருவறையில் குழலூதும் நிலையில், திருவாயில் வெண்ணெயுடன் ருக்மிணி - சத்யபாமா சமேதராக, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் வேணுகோபால சுவாமி. சுவாமி சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். தாயார் ஸ்ரீஅரவிந்த நாயகி என்னும் திருப்பெயர் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். பிராகாரத்தில் ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீசேனைமுதல்வர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

மரங்களும் செடிகளும் நிறைந்த சோலை யில், புள்ளினங்களில் பலவித ஓசைகளோடு திகழும் தெய்விகச் சூழலில் அமைந்திருக்கும் கோயிலில் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

பக்த மீரா பாடினாளே...

‘குழலின் நாதம் காதிலே
ஆரமுதம் போல் பாயுதே
சந்நிதி தன்னை நான் அகலேன்
கருணா சாகரா’ -

என்ற வரிகள் நம் நினைவில் தோன்றி, நம் மனதைக் கண்ணனிடம் லயிக்கச் செய்துவிடுகின்றன. அப்படி அவனிடம் லயித்த மனதுடன், நாம் வைக்கும் பிரார்த்தனைகள் நிறைவேறாமலா போகும்?!

இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றி அர்ச்சகரிடம் கேட்டோம்.

 ‘‘மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசித்து வழிபடவேண்டிய கோயில் இது. இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். மேலும் வீடு கட்டும் பணியில் தடை ஏற்பட்டால், இங்கு வந்து வேணுகோபால சுவாமியை வேண்டிக் கொண்டு சென்றால், உடனே வீடு கட்டும் பணி நல்லபடியாக முடிவதும் பக்தர்கள் நம்பிக்கையாக இருக்கிறது’’ என்றார்.

நீங்களும் ஒருமுறை உத்தமர்சீலிக்குச் சென்று வாருங்கள். அந்த உத்தமனின் திருவருளால் உங்கள் வாழ்க்கை உன்னதமாகும்.

தலம்: உத்தமர்சீலி

சுவாமி:
ஸ்ரீருக்மிணி - ஸ்ரீசத்தியபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி
(செங்கனிவாய் பெருமாள்)

தாயார்:

ஸ்ரீஅரவிந்தநாயகி

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை: 6 முதல் 9 மணி வரை
மாலை: 5 முதல் 7 மணி வரை

வழித்தடம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர்சீலி. திருச்சியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக