Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில் கும்பகோணம், தஞ்சாவூர்


மூலவர் : கரும்பாயிரம் பிள்ளையார்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர் : கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா

விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி

தல சிறப்பு

கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு.

திறக்கும் நேரம்

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில் கும்பகோணம், தஞ்சாவூர்.

பொது தகவல்

கும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அருகில் அமைந்துள்ள இந்தப் பிள்ளையாரின் பெருமையறிந்து தரிசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையான கரும்பாயிரம் பிள்ளையார் பக்தர்களின் வாழ்வை இனிப்பாக மாற்றிடுவார் என்பதில் ஐயமில்லை. கும்பகோணம் செல்பவர்கள், அவசியம் இந்தப் பிள்ளையாரையும் தரிசித்து வருகிறார்கள்.

பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்

பக்தர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, சிதறு காய் உடைத்தும், கரும்பை காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.

தலபெருமை

ஒருமுறை, வணிகன் ஒருவன் மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாகக் கரும்புகளை ஏற்றிக்கொண்டு பயணித்தான். இவ்வூர் எல்லைப் பகுதியைக் கடக்கும்போது அவனுக்கு உறக்கம் வரவே, அருகிலுள்ள திருக்குளத்தின் பக்கத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் குளத்து நீரில் முகம் கழுவிக் கொண்டு கரைக்குத் திரும்பினான். அப்போது சிறுவன் ஒருவன் வண்டிக்கு அருகில் நின்றுகொண்டு வண்டியைப் பார்த்தபடியே இருந்ததைக் கண்டான் வணிகன்.

எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது; ஒரு கரும்பைக் கொடேன் என்று வணிகனிடம் அந்தச் சிறுவன் கேட்டான். கரும்பு கொடுக்க வணிகனுக்கு மனமில்லை. எனவே, ஊஹும்... தர முடியாது என்று மறுத்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். சிறுவன் வண்டி ஓட்டத்தோடு தொடர்ந்து ஓடிக்கொண்டே, கெஞ்சலும் கொஞ்சலுமாக மீண்டும் மீண்டும் கரும்பு கேட்டுக் கொண்டே வந்தான். தெருவில் போய்க் கொண்டிருந்த சிலர் இந்நிகழ்வைப் பார்த்துவிட்டு, ஏனப்பா ! அந்தக் குழந்தை கேக்குது இல்லே.

ஒண்ணு ஒடிச்சுக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவே ! பார்க்கிறதுக்குப் பிள்ளையாராட்டம் எப்படியிருக்கு பார்த்தியா ! என்று சிறுவனைப் பார்த்துக் கூறினார்கள். அப்படியும் வணிகனுக்கு மனம் கனியவில்லை. இவையெல்லாம் கொஞ்சம் வேற மாதிரி கரும்பு. நாணல் குச்சிகள் மாதிரி ! இதை ஒடிச்சு உறிஞ்சினால் உப்பு கரிக்கும். ஆலையில் கொண்டு இயந்திரத்தில் பிழிந்தால்தான் இனிக்கும் ! என்று சிறுவனுக்காக சிபாரிசு செய்தவர்களிடம் பொய் சொன்னான்.

நல்ல சாறு தரும் கரும்புகளை வண்டி முழுவதும் வைத்துக்கொண்டு நாணல் குச்சிகள் என்றா சொல்கிறாய். அவையெல்லாம் உனக்குப் பயன்படாததாகவே ஆகட்டும் ! என்று கூறிவிட்டு, வண்டியைத் தொடர்ந்து சென்ற சிறுவன் அருகிலுள்ள ஆலயத்துக்குள் நுழைந்து மறைந்துவிட்டான். மறுநாள், அந்த வண்டிக்காரன் சர்க்கரை ஆலையை நோக்கி வண்டியைச் செலுத்தினான். அங்கு ஆலை கூலி ஆள் கரும்புக் கட்டுகளின் மேல் கைவைத்துப் பார்த்துவிட்டு கோபம் அடைந்து, ஏனப்பா, இந்த மாதிரி ஏமாத்து வேலை செய்யறே ! வெறும் நாணல் குச்சிகளைக் கட்டிவந்து கரும்புன்னு பொய் சொல்றே ! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று கேட்டான்.

அதிர்ச்சியடைந்த வணிகன் வண்டியைச் சென்று பார்க்க, எல்லாம் நாணல் குச்சிகளாகவே இருந்தது ! எதுவுமே புரியாமல் தவித்தவன், பின் தன் வீட்டுக்கு வந்து அப்படியே படுத்து உறங்கிவிட்டான்.

அந்த வணிகனின் கனவில் கரும்பு கேட்ட சிறுவன் தோன்றி, நான்தான் பிள்ளையார். நல்ல கரும்புகளை வெறும் நாணல் குச்சிகள் என்று என்னிடமே பொய் சொன்னாய். இப்போது அது உனக்குப் பயன்படாமலே போய் விட்டது. வணிகனாகிய உனக்கு தர்ம சிந்தனை துளியும் இல்லையே ! என்று இகழ்ச்சியாகக் கூறினான். இதன்பின்னரே, பிள்ளையாரே சிறுவனாக வந்து தன்னிடம் விளையாடியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட வணிகன், சுவாமி ! என்னைச் சோதித்தது தாங்கள்தானா? என் தவறை மன்னித்து அருளுங்கள் ! என்று சொல்லி கோயிலுக்குச் சென்றான்.

கோபம் விலகிய விநாயகர், நாணல் குச்சிகளை மீண்டும் கரும்புகளாக மாற்றினார். அன்றுமுதல் இந்தப் பிள்ளையார் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சற்றே பழைமையான ஆலயம். ஆகம விதிகளின்படி நாள் தவறாமல் வழிபாடுகள் நடை பெறுகின்றன. விநாயகருக்குரிய பண்டிகை நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

தல வரலாறு

ஆதிகாலத்தில் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான்.

ஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்: கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு.

இருப்பிடம்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் இக்கோயில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக