மத்திய அரசின் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் 2வது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்நிறுவனப் பங்குகளை வாங்க அதிகளவிலான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 முறை விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் BPCL நிறுவனப் பங்குகளைக் கைப்பற்ற எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை.
முகேஷ் அம்பானி
இந்த நிலையில் BPCL பங்குகளைக் கைப்பற்ற விண்ணப்பம் அளிக்கக் கடைசி நாளான நவம்பர் 16ஆம் தேதியன்று பன்னாட்டு நிறுவனங்கள் வராத காரணத்தால் ரிலையன்ஸ் களத்தில் இறங்கும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரையில் முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசு
பெரிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காத நிலையில், பல சிறிய நிறுவனங்கள் BPCL பங்குகளைக் கைப்பற்ற விண்ணப்பம் அளித்துள்ளது. இதனால் இந்த முறை காலத்தை மீண்டும் நீட்டிக்காமல் விண்ணப்பங்களை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது DIPAM அமைப்பு.
நிர்மலா சீதாராமன்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்கப் பல விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அடுத்தகட்டமான transaction advisor கட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது என மத்திய முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை அமைப்பின் செயலாளர் துஹின் கன்டா பாண்டே மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளனர்.
விருப்ப விண்ணப்பங்கள்
மத்திய அரசு தரப்பு இதுவரை எத்தனை விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளது, விண்ணப்பதாரர் யார், எவ்வளவு தொகைக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை.
ஆனால் BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்க 3 முதல் 4 விருப்ப விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளதாக ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளது.
விண்ணப்பங்கள் ஆய்வு
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள விண்ணப்பங்களை மத்திய அரசின் DIPAM மற்றும் நிதியமைச்சகம் ஆய்வு செய்து, BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளைக் கைப்பற்ற விண்ணப்பதாரர்களுக்குத் தகுதி உள்ளதா, நிதிநிலை உள்ளதா என்பதை ஆய்வு செய்வதே இந்த transaction advisor கூட்டம்.
நிதியியல் கோரிக்கை
இந்த ஆய்வு பணிகள் அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு நடக்கும் என்பதால், ஆய்வுக்குப் பின் மத்திய அரசு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்-களுக்கு request for proposal (RFP) அனுப்பப்பட்டு, நிதியியல் கோரிக்கை பெறப்படும்.
மாபெரும் வர்த்தகம்
BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் இந்நிறுவனத்தின் மும்பை, கொச்சி, பினா ஆகிய பகுதிகளில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலைகள், நாடு முழுவதும் இருக்கும் BPCL நிறுவனத்தின் 17,138 பெட்ரோல் பங்க், இதோடு 6,151 எல்பிஜி விநியோக ஏஜென்சி மற்றும் 61 விமான எரிபொருள் ஸ்டேஷன்ஸ் ஆகியவற்றையும் பெற முடியும்.
பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய பெட்ரோலியம் சந்தையில் சுமார் 22 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் சந்தையில் 15.3 சதவீதம் இந்நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது.
70,000 கோடி ரூபாய்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் அரசிடம் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை இன்றைய விலைப்பட்டி 47,430 கோடி ரூபாய்க்கும், பொதுச் சந்தையில் இருக்கும் 26 சதவீத பங்குகளை 23,276 கோடி ரூபாய்க்கும் வாங்க வேண்டும். இந்த 79 சதவீத பங்குகள் மதிப்பு கிட்டதட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்புடையது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக