இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய நிதிச்சுமை, நிதி நெருக்கடியைத் தாண்டி வர்த்தகம் செய்து வரும் நிலையில் 2020-21ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வரும் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும் கடுமையான போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.
நிதி சுமையில் டெலிகாம் நிறுவனங்கள்
ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஏற்படும் நிதி சுமை, டெலிகாம் நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் சுமை, AGR கட்டண நிலுவை சுமை ஆகியவை சேர்ந்துள்ள நிலையில் 2021ல் டெலிகாம் கட்டணம் பெரிய அளவில் அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
டெலிகாம் நிறுவனங்களின் இந்தக் கட்டண உயர்வின் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெற்று நிதிச் சுமையைக் குறைக்க முடியும்.
வர்த்தகப் போட்டி
சில வருடங்களுக்கு முன்பு இந்திய டெலிகாம் சந்தையில் 12க்கும் அதிகமான நிறுவனங்கள் இருந்தது, ஆனால் வர்த்தகப் போட்டி, நிதிச் சுமை ஆகியவற்றின் காரணமாக இதன் எண்ணிக்கை தற்போது பாதிக்கும் குறைவான அளவீட்டை அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஏற்படும் கூடுதல் நிதி சுமை டெலிகாம் துறையை மேலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AGR கட்டண நிலுவை
2020ல் டெலிகாம் உச்ச நீதிமன்றம் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 1.47 லட்சம் கோடி ரூபாய் அளவிலான AGR கட்டண நிலுவையைச் செலுத்த 10 ஆண்டுக் கால அவகாசம் கொடுத்த நிலையில் வோடபோன் (50,000 கோடி ரூபாய் கட்டண நிலுவை) திவாலாகும் நிலையில் இருந்து தப்பித்தது. இல்லையெனில் இந்திய டெலிகாம் சந்தை இருமுனை போட்டியாக மட்டுமே இருந்திருக்கும்.
வோடபோன் முயற்சிகள்
வோடபோன் இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கவும், தொடர்ந்து இந்தியாவில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், பங்கு விற்பனை மற்றும் கடன் வாயிலாக நிதி திரட்டி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்ற முக்கியமான திட்டத்துடன் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்குக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
ஜியோ கட்டண உயர்வின் முடிவு
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனது டெலிகாம் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏற்பட உள்ள போட்டி, போட்டியின் மூலம் ஏற்படும் நிதிச் சுமை.
பார்தி ஏர்டெல் கட்டண உயர்வு
பார்தி ஏர்டெல் தனது முதல் இடத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ-விடம் பறிகொடுத்த நிலையில், தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் கட்டணத்தை உயர்த்தவில்லை என வோடபோன் கட்டணத்தை உயர்த்திய காலகட்டத்தில் அறிவித்தது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்குப் பின் பார்தி ஏர்டெல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை இல்லை என்பதால் ஏர்டெல் ஏலத்தில் தீவிரமாக இறங்காது என்றும், கடந்த சில வருடத்தில் ஏர்டெல் கைப்பற்றிய நிறுவனத்தின் வாயிலாகப் போதுமான அலைக்கற்றை பெற்றுள்ளது என்றாலும், தற்போது ஒப்பந்தம் முடியும் 900 மற்றும் 1800 MHz பேண்ட் அலைக்கற்றைத் திரும்பப் பெறுவதில் ஏர்டெல் கண்டிப்பாக ஈடுபடும் எனக் கருத்து நிலவுகிறது.
ஜியோ தீவிரம் காட்டும்
இதேபோல் இந்த ஏலத்தில் ஜியோ தீவிரமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஜியோ நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போதுமான அலைக்கற்றையைப் பெற ஜியோ கடுமையான போட்டிப்போட்டு ஏலத்தில் அலைக்கற்றை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக