பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன், தனது இந்திய வர்த்தகத்திற்காக 2 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு வரும் நிலையில் 3 முதலீட்டு நிறுவனங்கள் வோடபோன் நிறுவனத்தில் முதலீடு செய்து இந்திய வர்த்தகத்தைக் காப்பாற்ற முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வர்த்தகப் போட்டி, நிதி சுமை, கடன் அளவு எனப் பல பிரச்சனைகளால் வோடபோன் ஐடியா வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து இழந்து வருகிறது.
இந்த நிலையில் 3 நிறுவனங்களின் முதலீடுகள், இந்திய சந்தையில் வோடபோன் நிறுவனம் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரும்
3 முதலீட்டாளர்கள்
வோடபோன் நிறுவனத்தில் ஏற்கனவே ஓக்ஹில் அட்வைசர்ஸ் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தற்போது கோல்டன்ட்ரீ அசர்ட் மேனேஜ்மென்ட், பசிபிக் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தற்போது புதிதாக இணைந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இழப்பு
வோடபோன் ஐடியா இந்தியாவில் தொடர்ந்து தனது சக போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திடம் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதனால் VI நிறுவனம் தற்போது 4ஜி சேவையைக் கட்டாயம் விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
5ஜி சேவைகள்
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்கானப் பணியில் இறங்கி வரும் நிலையில், வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள 4ஜி சேவையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளது.
இது வோடபோன் ஐடியாவின் 5ஜி வர்த்தகத்திற்கும் பெரும் பின்னடைவாக இருக்கும்.
புதிய முதலீடு
இந்த முதலீட்டின் மூலம் வோடபோன் ஐடியா-வுக்குத் தேவையான நிதி தேவையைப் பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் கட்டண நிலுவை, கடன் சுமையைக் குறைக்க முடியும். இதுமட்டும் அல்லாமல் வர்த்தக வளர்ச்சிக்காக அதிகளவில் முதலீடு செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிராய் அமைப்பு
இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பு வாடிக்கையாளர் குறித்து வெளியிட்ட செப்டம்பர் மாத தரவுகள் அடிப்படையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 14.6 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
ஆனால் ஏர்டெல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
பார்தி ஏர்டெல்
டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் மாதத்தில் பார்தி ஏர்டெல் சுமார் 37.7 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது. ஜியோ உடன் நடக்கும் இந்தக் கடுமையான வர்த்தகப் போட்டியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இது மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.
வோடபோன் ஐடியா
VI என ரீ பிராண்டிங் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா இதே செப்டம்பர் காலாண்டில் 46.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இந்த வீழ்ச்சியைச் சமாளிக்கக் கண்டிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு முதலீடு தேவை.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக