
ஓலா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு, பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாடகை கார் சந்தையில் மிகவும் பிரபலமான ஓலா நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்க உள்ளது. முதல் எலெக்ட்ரிக் கூட்டரை மாடலை வரும் ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக ஓசூரில் மிகப்பெரிய வாகன உற்பத்தி ஆலையையும் அமைத்து வருகிறது. இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல்வேறு வெளிநாடுகளிலும் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா விற்பனைக்கு கொண்டு செல்ல உள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,"முதல்கட்டமாக இந்தியாவில் வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் எங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
நடப்பு நிதி ஆண்டிலேயே, அதாவது வரும் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ள ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்க முடிவு செய்துள்ளோம்.
ஐரோப்பாவில் உள்ள வர்த்தக வளம் அதிகம் உள்ள பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வோம். இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கூட அதிக வர்த்தக வளம் உள்ளது. இந்திய சந்தை என்பது முதன்மையானதாக வர்த்தக திட்டத்தில் வைத்துள்ளோம். அதேநேரத்தில், சர்வதேச அளவில் பல்வேறு வெளிநாடுகளில் செல்வதற்கும் திட்டம் வைத்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது குறித்தும் சூசகமாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் எனப்படும் விரைவு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் இருசக்கர வாகனங்களுக்காக உருவாக்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த ஹைப்பர் சார்ஜர் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்வோம். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நான்கு சக்கர மின்சார வாகனங்களை களமிறக்கும்போது இந்த ஹைப்பர்சார்ஜர் நிலையங்களை விரிவாக்கம் செய்யப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக