Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 பிப்ரவரி, 2022

இனி மதுரை & கோவையிலும் பஜாஜ் சேத்தக் கிடைக்கும்!! புதியதாக 12 நகரங்களில் விற்பனை துவக்கம்!

இனி மதுரை & கோவையிலும் பஜாஜ் சேத்தக் கிடைக்கும்!! புதியதாக 12 நகரங்களில் விற்பனை துவக்கம்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சந்தையை மேலும் 12 நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏகப்பட்ட இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் முன்னணி நிறுவனம் என்று பார்த்தால், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டாரை மட்டுமே தற்போதைக்கு கூற முடியும். இந்த இரு நிறுவனங்களில் இருந்து சேத்தக் மற்றும் ஐக்யூப் என்ற 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன

இந்தியா முழுவதும் சில்லறை விற்பனை மைய நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி இருந்தாலும், இந்த இரு முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களது தயாரிப்புகளை போல் மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இப்போதைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பஜாஜ் ஆட்டோவை பொறுத்தவரையில், இதன் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முதற்கட்டமாக தொழிற்சாலை அமைந்துள்ள புனேவிலும், பெங்களூருவிலுமே அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன்பின்பு கடந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் நமது சென்னையிலும், ஹைதராபாத்திலும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது. சென்னை & ஹைதராபாத் உள்பட கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் இந்தியாவின் 6 நகரங்களில் புதியதாக சேத்தக் இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஆக மொத்தமாக, 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் 8 நகரங்களில் (புனே, பெங்களூரை சேர்த்து) பஜாஜ் சேத்தக் விற்பனையில் இருந்தது.

இந்த நிலையில் தான் தற்போது அதிரடியாக மேலும் 12 நகரங்களில் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த 12 நகரங்களில் நமது தமிழகத்தை சேர்ந்த கோயம்புத்தூர், மதுரை மற்றும் தேசிய தலைநகர் டெல்லி, மும்பை, கொச்சி, கோழிக்கோடு, ஹூப்ளி, விசாகப்பட்டினம், நாஷிக், வசாய், சூரத், மபுஸா உள்ளிட்டவை அடங்குகின்றன.

இதன் மூலமாக பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவில் மாற்றமில்லை. அதே 4-8 வாரங்களாகவே தொடர்கிறது.

சேத்தக் இ-ஸ்கூட்டரின் சந்தை விரிவாக்கம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா கருத்து தெரிவிக்கையில், "முற்றிலும் சோதிக்கப்பட்ட, நம்பகமான தயாரிப்பின் தரத்தில் சேத்தக்கின் வெற்றி அமைந்துள்ளது. நேரடி தொடர்பில்லா விற்பனை & சேவை ஆனது வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போன்ற அறிமுகமில்லாத பிரிவிற்குள் நுழைய ஊக்கமளிக்கிறது.

வரும் சில வாரங்களில் அதிக தேவைக்கு ஏற்ப சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை மைய நெட்வொர்க்கை இரட்டிப்பாக்குவது எங்கள் திட்டம்" என்றார். மேற்கூறப்பட்டுள்ள 20 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் புக் செய்யலாம்.

அர்பன் மற்றும் பிரீமியம் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் சேத்தக் வழங்கப்படுகிறது. இதில் டாப் பிரீமியம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.45 லட்சம் ஆக இப்போதைக்கு உள்ளது. இயக்க ஆற்றலை வழங்க சேத்தக்கில் 3.8 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 5 பிஎச்பி மற்றும் 16.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகின்ற 3 kWh ஐபி67 லித்தியம்- இரும்பு பேட்டரி தொகுப்பு அதிகப்பட்சமாக 95 கிமீ ரேஞ்சை ஈக்கோ மோடில் வழங்குகிறது. பஜாஜ் சேத்தக்கின் டாப் ஸ்பீடு 70kmph ஆகும். வீட்டு உபயோக மின்சாரத்தின் மூலம் இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 6இல் இருந்து 8 மணிநேரங்கள் வரையில் தேவைப்படுகிறது.

உலகளவில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்பட்டுவரும் தேவையை பயன்படுத்தி கொள்ளும் விதமாக புதிய நகரங்களில் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்குவது மட்டுமின்றி, புனேவில் புதியதொரு தொழிற்சாலையையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கட்டமைத்து வருகிறது. இந்த புதிய பஜாஜ் தொழிற்சாலை சேத்தக் உள்பட இந்த நிறுவனத்தின் எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களுக்கானதாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக