உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டாலே நாம் முதலில் உணவு கட்டுப்பாட்டை தான் தேர்ந்தெடுக்கிறோம். அப்படி உடல் எடையை குறைக்கும் போது நமது உடலில் உள்ள கொழுப்பை கறைக்க உதவும் உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக நமது பாரம்பரிய உணவில் உள்ள நன்மைகளை உடல் எடை குறைப்பின் போது எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
நீங்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர் என்றால், உங்களது டயட் பட்டியலில் மோர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காரணம் மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் போது அது தேவையற்ற கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மேலும் மோரில் உள்ள வைட்டமின் பி2 நாம் உண்ணும் உணவை உடலுக்கு சக்தியாக மாற்றித்தருகிறது. இதனால் தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்வது தடுக்கப்படுவதோடு, நச்சுப்பொருட்களும் வெளியேற்றப்படுகிறது.
இந்தியர்களில் குறிப்பாக தமிழர்களுக்கு மோர் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. எந்த விசேஷத்திலும் தலை வாழை இலையில் தடபுடலாக விருந்து வைத்தாலும், கடைசியில் மோர் இல்லாமல் பந்தி நிறையாது.
நெஞ்சு எரிச்சல், அஜீரணம், கொழுப்பை கரைப்பது, நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் மோரை இப்படி தயார் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைப்பிற்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் மோர் ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்:
தயிர் | அரை கப் |
தண்ணீர் | ஒன்றரை கப் |
பிளக்ஸ் சீட் (ஆளி விதைகள்) | 1 ஸ்பூன் |
சீரகம் | 1 ஸ்பூன் |
வெந்தயம் | 1 ஸ்பூன் |
செய்முறை:
* முதலில் தயிர் மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மத்தினால் நன்றாக கடைந்து கொள்ளவும்.
* இப்போது மிக்ஸியில் ஆளி விதைகள், சீரகம், வெந்தயம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு கிளாஸில் மோரை ஊற்றி, அதில் ஆளி விதைகள், சீரகம், வெந்தயம் கலந்து அரைத்து வைத்திருக்கும் பொடியை 1 தேக்கரண்டி அளவிற்கு கலந்து நன்றாக கலக்கவும். அவ்வளவு தான் உடல் எடை மற்றும் கொழுப்பை கரைக்க உதவும் ஆளி விதைகள், சீரகம், வெந்தயத்துடன் சூப்பரான மோர் தயார்.
இந்த மோரை மதிய உணவு அல்லது மதிய உணவிற்கு பிந்தைய இடைப்பட்ட நேரமான 3 முதல் 4 மணிக்கு எடுத்துக்கொள்வது நல்லது. கொழுப்பு இழப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக