கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
12-14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி; பிரதமர் பெருமிதம்
இந்நிலையில், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, அதாவது 2008, 2009, 2010ம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு, கோர்பவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இத்தடுப்பு மருந்தை தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஹைதராபாத்தின் பயாலஜிக்கல் E மற்றும் அமெரிக்காவின் இரண்டு மருத்துவக்கல்லூரிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான முதல் தடுப்பூசியாகும்.
இத்தடுப்பூசி சீனாவின் வூஹானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிராக 90 சதவீதமும், டெல்டா வகை வைரசுக்கு எதிராக 80 சதவீதமும் செயலாற்றக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை விட கூடுதல் எதிர்ப்பு சக்தி கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோர்பவாக்ஸ் தடுப்பூசி, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீனை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பயனாளிகள் 28 நாட்கள் இடைவெளியில், 2 டோஸ் கோர்பவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியின் விலை 400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
18 மற்றும் அதற்கு அதிகமான வயதுடையோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், 12-14 வயதுடையோருக்கு கோர்பவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த வயதுடையோர் தாங்களாகவோ அல்லது பெற்றோர் துணையுடனோ கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
4 பேர் கொண்ட குடும்பத்தல் ஒருவரது மொபைல் எண்ணை பயன்படுத்தி 4 பேருக்கு தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2 மாதங்களுக்கு முன்பாக 15-18 வயதுடையோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக