Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 மார்ச், 2022

மனித முகம், மீன் வால் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான 'கடற்கன்னி: விஞ்ஞானிகளால் ஆய்வு..

கடல் கன்னி உண்மையில் இருக்கிறதா? இந்த கேள்விக்கான உறுதியான பதில் யாரிடமும் இருந்து ஆதாரத்துடன் இதுவரை வந்ததில்லை என்பதே உண்மை. ஆனால், பறந்து விரிந்த இந்த பூமியில் எங்கேயோ, எப்படியோ சில நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்று என்றாவது ஒரு நாள், எதாவது ஒன்று வடிவத்தில் கிடைத்திருக்கும். அப்படி, கடல் கன்னிகள் பற்றிய கட்டுக்கதைகள் எல்லாம் உண்மை தான் என்று நிரூபிக்கும் வகையில் கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் இந்த 'கடல் கன்னியின் மம்மி' படிவம்.

இதுவரை உங்களுக்குத் தெரிந்த அழகிய கடற்கன்னி இல்லை 'இது'

கடற்கன்னிகள் என்ற வார்த்தையைக் கேட்டதும் உங்கள் நினைவிற்கு என்ன வரும்? சிலருக்கு அழகான உடல் வளைவுகளுடன் நீண்ட கூந்தல் கொண்ட ஒரு அழகிய பெண் உருவத்தில், உடலின் கீழ்ப் பகுதி மட்டும் மீன் போன்ற அமைப்புடன் இருக்கும் ஒரு அழகிய உருவம் உங்கள் கண்களுக்குள் வந்து சென்றிருக்கும். ஆனால், இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கடற் கன்னியின் பதப்படுத்தப்பட்ட இந்த உடல் ஆதாரம் அப்படியானது அல்ல என்பதே உண்மை. இது முற்றிலும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

இந்த கடற்கன்னி 1736 ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில் பிடிபட்டதா?

ஜப்பானிய விஞ்ஞானிகள் 1736 மற்றும் 1741க்கு இடையில் ஜப்பானியத் தீவான ஷிகோகுவில் பசிபிக் பெருங்கடலில் பிடிபட்டதாகக் கூறப்படும் ஒரு மர்மமான 12 அங்குல உயிரினத்தை இப்போது ஆய்வு செய்து வருகின்றனர். திகைப்பூட்டும் மம்மியிடப்பட்ட உயிரினம் இப்போது அசகுச்சி நகரில் உள்ள ஒரு கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு கடற்கன்னி போன்ற வடிவில் காட்சி அளிக்கிறது. உண்மையில் இந்த உயிரினம் முடி, பற்கள், நகங்கள் மற்றும் செதில்களுடன் கூடிய கீழ் உடலைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மர்மமான 12 அங்குல கடற்கன்னி
போன்ற உயிரினத்தின் உடல்

இதற்கு முன் நீங்கள் கடல் கன்னிகள் அழகாக மட்டும் தான் இருக்கும் என்று நினைத்திருந்தால், இந்த மம்மி கடற்கன்னியின் முகம் உங்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். உண்மையைச் சொல்லப் போனால், இந்த கடற்கன்னியின் முகம் உங்களின் முகத்தை முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. கூரான பற்கள், இரண்டு கைகளிலும் தனித்தனி 5 விரல்கள், தலை மற்றும் புருவத்தில் முடியுடன் இந்த கடற்கன்னியின் உருவம் காட்சியளிக்கிறது. இது ஒரு வினோதமான மனித தோற்றத்தைக் கொண்டுள்ளது.

உடலின் மேல் பாதி மனித தோற்றம்.. கீழ் பாதி மீன் போன்ற தோற்றமா?

அதன் மீன் போன்ற கீழ் பாதியைத் தவிர, மீதம் உள்ள உறுப்புக்கள் மனிதர்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடற் கன்னிகள் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறியவர்களுக்கு வாயை அடைப்பது போல் இதன் உருவம் அமைந்துள்ளது. ஜப்பான் இப்போது இந்த கடல் கன்னியின் உடலை ஆராய்ச்சி செய்யப் போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்த உடல் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று கூறப்பட்டுள்ளது.

கடற்கன்னி தேவதைகளுக்கு என்று தனியாகப் புராணக்கதை உள்ளதா?

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி , குராஷிகி அறிவியல் மற்றும் கலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மம்மியின் ரகசியங்களை வெளிக்கொணரும் முயற்சியில் CT ஸ்கேனிங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த ஒகாயாமா நாட்டுப்புறக் கழகத்தைச் சேர்ந்த ஹிரோஷி கினோஷிதா, NYT இடம் இந்த வினோதமான உயிரினம் மத முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். 'ஜப்பானிய கடற்கன்னி தேவதைகளுக்கு என்று தனியாக அழியாமை பற்றி ஒரு புராணக்கதை உள்ளது,' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கடற்கன்னியின் இறைச்சியைச் சாப்பிட்டால் மரணமே கிடையாதா? உண்மை தானா?

கடற்கன்னியின் இறைச்சியைச் சாப்பிட்டால், நீங்கள் ஒருபோதும் இறக்க மாட்டீர்கள் என்று அந்த புராணக்கதைகளில் கூறப்படுகிறது என்றும் கூறியுள்ளார். ஜப்பானின் பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் தற்செயலாக ஒரு கடற்கன்னி தேவதையின் இறைச்சியைச் சாப்பிட்டு, சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்ததாக ஒரு புராணக்கதை உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த 'யாவ்-பிகுனி' கடற்கன்னி மம்மி கண்டுபிடிக்கப்பட்ட கோவிலுக்கு அருகில் பாதுகாக்கப்படுகிறது. புராணத்தை நம்பிய சிலர், கடற்கன்னி மம்மியின் செதில்களைச் சாப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கடற்கன்னி பற்றி 1903 இல் எழுதப்பட்ட கடிதம் கொடுத்த ஆதாரம்

மேலும், 1903 இல் இருந்து வெளிவந்த ஒரு வரலாற்றுக் கடிதம், வெளிப்படையாக இந்த கடற்கன்னியின் முன்னாள் உரிமையாளரால் எழுதப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. அதில், கடற்கன்னி மம்மியுடன் சேமித்து வைக்கப்பட்ட அதன் ஆதாரம் பற்றிய கதையை அக்கடிதம் வெளிப்படுத்துகிறது. கொச்சி மாகாணத்திற்கு அப்பால் உள்ள கடலில் மீன் பிடிக்கும் வலையில் ஒரு கடற்கன்னி தேவதை சிக்கியது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதைப் பிடித்த மீனவர்களுக்கு அது கடல் கன்னி என்பது தெரியாமல் போனது.

குடும்பப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த கடற்கன்னியின் உடல்

மீனவர்கள் வலையில் சிக்கிய கடற்கன்னி உடலை ஒசாகாவுக்கு எடுத்துச் சென்று வழக்கத்திற்கு மாறான மீன் என்று மீனவர்கள் விற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த கடற்கன்னி உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடும்பத்தின் முன்னோர்கள் அதை வாங்கி குடும்பப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அசகுச்சியில் உள்ள என்ஜுயின் கோவிலுக்கு இந்த கடற்கன்னி மம்மி எப்படி வந்தது அல்லது எப்போது வந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடற்கன்னி கண்ணாடிப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதா?

ஆனால், இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதாகவும், தற்போது தீயில்லாத பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைப் பாதிரியார் கோசென் குய்டா கூறியுள்ளார். 'கொரோனா வைரஸ் தொற்றுநோயை இந்த தேவதை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும் என்று நம்புகிறோம், நாங்கள் நம்பிக்கையுடன் இதை வணங்குகிறோம்,' என்று அவர் ஜப்பானியச் செய்தித்தாளான தி அசாஹி ஷிம்புனிடம் கூறியுள்ளார். இருப்பினும், கினோஷிதா, உயிரினத்தைப் பற்றிய நடைமுறைப் பார்வையைச் சோதிக்கிறார்.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் கடற்கன்னி பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருமா?

எப்போதும் ஒரு செய்தி வெளியாகினால் அது தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்கள் உருவாகும். அந்த வகையில் ஒரு சிலர் இந்த கடற்கன்னி தோற்றத்தின் கூற்று ஒரு புரளியாக இருக்கலாம் என்று கூறுகிறது. மற்றொரு அறிக்கையின்படி, இந்த உயிரினம் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நிகழ்ச்சியின் ஒரு பொக்கிஷமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை உண்மைக்காக நாம் காத்திருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக