Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 மார்ச், 2022

கார்களின் தயாரிப்பு செலவை குறைப்பதற்காக கம்பெனிகள் செய்யும் 4 ட்ரிக்ஸ்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

பல்வேறு அதிநவீன மற்றும் விலை உயர்ந்த பாகங்களை கார்கள் கொண்டிருக்கும். எனவே புதிய கார்களை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஆகும். இருப்பினும் உற்பத்தி செலவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்து, அதிக லாபம் ஈட்டுவதற்காக கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு சில யுக்திகளை கையாண்டு வருகின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கட்டுமான தரத்தில் சமரசம்

கட்டுமான தரத்தில் செய்து கொள்ளப்படும் சமரசம் மூலமாக, நிறைய கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. இது பார்ப்பதற்கு வெளியே தெரியாவிட்டாலும் கூட, உண்மை இதுவே. கட்டுமான தரத்தில் செய்யப்படும் சமரசங்களுக்கு பல்வேறு உதாரணங்களை கூற முடியும்.

மெல்லிய ஷீட் மெட்டல்களை (Thinner Sheet Metals) அதிகளவில் பயன்படுத்துவது, அதிக வலிமையான ஸ்டீலை (High Strength Steel) குறைவான அளவில் பயன்படுத்துவது போன்றவை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும். அதேபோல் காரின் உட்புறத்தில் கடினமான பிளாஸ்டிக்குளையும், தரம் இல்லாத மெட்டீரியல்களை பயன்படுத்துவதும் கூட செலவு குறைப்பு நடவடிக்கைகள்தான்.

டோர் மற்றும் இன்ஜின் இன்சுலேசன் புறக்கணிப்பு

ஒட்டுமொத்த என்விஹெச் லெவல்களை (NVH levels) குறைப்பதற்கு, டோர் மற்றும் இன்ஜின் இன்சுலேன் (Insulation) மிகவும் முக்கியமானது. இதன் மூலம்தான் பயணிகளுக்கு அமைதியான பயண அனுபவம் கிடைக்கும். அத்துடன் டோர் இன்சுலேன், கேபினுக்கு உள்ளே ஆடியோ தரத்தை உயர்த்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒட்டுமொத்த உற்பத்தி செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக, சில சமயங்களில் கார் உற்பத்தி நிறுவனங்கள் இன்சுலேசனை முற்றிலுமாக புறக்கணித்து விடுகின்றன என்பது வருத்தமான விஷயமாகும். இதுதவிர முக்கியமான வசதிகளை தவிர்ப்பதன் மூலமும் கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவை குறைக்கின்றன.

ஒருங்கிணைந்த ஹெட் ரெஸ்ட்

காரின் கேபின் சௌகரியமாக இருப்பதில் ஹெட் ரெஸ்ட்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. உங்கள் பயண அனுபவத்தை தீர்மானிப்பதில் ஹெட் ரெஸ்ட்களும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக ஹெட் ரெஸ்ட்களும் கூட கார் நிறுவனங்களின் உற்பத்தி செலவு குறைப்பு நடவடிக்கைகளில் சிக்கி விட்டன.

அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட்களுக்கு (Adjustable Head Rests) பதிலாக ஒருங்கிணைந்த ஹெட் ரெஸ்ட்களை (Integrated Head Rests) வழங்குவதன் மூலமாக கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவை குறைக்கின்றன. கார் நிறுவனங்கள் இப்படி செய்வதன் காரணமாக, பயணிகளுக்கு முழு சௌகரியம் கிடைப்பதில்லை.

சிறிய டயர்கள்

புதிய கார்களில், இயல்பாக வழங்க வேண்டிய அளவை காட்டிலும், சிறிய டயர்களை பொருத்துவதன் மூலமும் கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. பொதுவாக கார் உற்பத்தி நிறுவனங்கள் வேறு நிறுவனங்களிடம் இருந்துதான் டயர்களை வாங்கும். அதாவது பிரபலமான டயர் நிறுவனங்களிடம் இருந்து, கார்களுக்கான டயர்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படும்.

அப்போது பெரிய டயர்களுக்கு பதிலாக சிறிய டயர்களை வாங்கி கொள்வதை கார் உற்பத்தி நிறுவனங்கள் செய்கின்றன. இதன் மூலம் செலவையும் அவை குறைத்து விடுகின்றன. சில சமயங்களில் ஒரு காரின் டாப் வேரியண்ட்டில் பெரிய டயர்கள் வழங்கப்படும். அதே சமயம் அந்த காரின் லோ-வேரியண்ட்களில் சிறிய டயர்கள் வழங்கப்பட்டிருக்கும். உற்பத்தி செலவை குறைப்பதற்காகவே இப்படி செய்யப்படுகிறது.

உற்பத்தி செலவை குறைப்பதால் என்ன லாபம்?

கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை குறைப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. அதிகமான லாபம் ஈட்ட வேண்டும் என்பது ஒரு காரணம். கார் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம். அதாவது காரின் விலை அதிகமாக இருந்தால், வாடிக்கையாளர்கள் வாங்க தயங்குவார்கள்.

எனவே அவர்களுக்கு ஓரளவிற்கு குறைவான விலையில் கார்களை வழங்க வேண்டும். அப்போது மட்டும்தான் விற்பனை அதிகரிக்கும். இதனால் எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் உற்பத்தி செலவை குறைத்து, கார்களுக்கு ஓரளவிற்கு குறைவான விலையை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இதுவும் கூட ஒரு வகையில் அதிக லாபம் ஈட்டும் வழிமுறைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக