Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 மார்ச், 2022

கப்பல்களை கட்டி வைக்கும் கயிற்றில் 'டிஸ்க்' இருக்கும்! எதுக்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

துறைமுகங்களுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' என்றால், வித்தியாசமான ஒன்றை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தடிமனான 'மூரிங் லைன்கள்' (Mooring Lines) மூலம் கப்பல்களை கட்டி வைத்திருப்பார்கள். கப்பல்களை கட்டி வைப்பதற்கு பயன்படும் கயிறுகள் மற்றும் சங்கிலிகள் போன்றவற்றைதான் 'மூரிங் லைன்கள்' என அழைக்கின்றனர்.

கப்பல்கள் அதிக எடை கொண்டவை. எனவே இந்த கயிறுகள் மற்றும் சங்கிலிகள், கப்பல்களை கட்டி வைக்கும் பணிக்கு தகுதி இல்லாதவை போல தோன்றலாம். ஆனால் உண்மையில் அவை மிகவும் வலுவானவை. சில சமயங்களில், கப்பல்களை கட்டி வைக்கும் கயிறு அல்லது சங்கிலியில், பெரிய உருவம் கொண்ட உலோக வட்டுக்கள் (Metal Disks) இருக்கும்.

இதனை நீங்கள் பார்த்திருந்தால் இந்த பெரிய உலோக வட்டுக்கள் எதற்காக இருக்கின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும். அல்லது இந்த செய்தியின் மூலமாக கூட, கப்பல்களை கட்டி வைக்கும் கயிறு அல்லது சங்கிலியில் பெரிய உலோக வட்டுக்கள் வைக்கப்படுவதை நீங்கள் முதல் முறையாக கேள்விப்படலாம்.

இதில், நீங்கள் எந்த ரகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கப்பல்களை கட்டி வைக்கும் கயிறு அல்லது சங்கிலி போன்றவற்றில் எதற்காக உலோக வட்டுக்கள் வைக்கப்படுகின்றன? என்பதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இது கப்பல்களில் மிக நீண்ட காலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

இந்த வினோதமான நடைமுறை பார்ப்பதற்கு எந்த பலனும் இல்லாதது போல தோன்றலாம். ஆனால் இதற்கு பின்னால், அருமையான காரணம் ஒன்று உள்ளது. ராணுவ கப்பல்கள், சரக்கு கப்பல்கள் மற்றும் உல்லாச கப்பல்கள் என அனைத்து வகையான கப்பல்களிலும் இந்த பெரிய உலோக வட்டுக்களை நீங்கள் காண முடியும்.

கப்பலை கயிறு அல்லது சங்கிலி கட்டி நிறுத்திய உடனேயே இந்த உலோக வட்டுக்களை வைத்து விடுவார்கள். எதற்காகவும் இந்த பணியை தாமதம் செய்யவோ அல்லது தள்ளி போடவோ மாட்டார்கள். இந்த உலோக வட்டுக்கள் கயிறு அல்லது சங்கிலியில் நன்றாக சுழலக்கூடிய வகையில் இருக்கும். ஒருவேளை கப்பல் பணியாளர்கள், இந்த உலோக வட்டுக்களை வைக்க மறந்து விட்டால் சிக்கல்தான்.

இந்த உலோக வட்டுக்களை கயிறு அல்லது சங்கிலியில் வைப்பதற்கு மறந்து விட்டால், கப்பலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த உலோக வட்டுக்கள் கப்பலின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கை ஆற்றுகின்றன. அவற்றுக்கு 'ரேட் கார்டுகள்' (Rat Guards) என்று பெயர். எலிகளிடம் இருந்து கப்பலையும், பயணிகளையும் பாதுகாக்கும் பணிகளை அவை மேற்கொள்கின்றன.

எனவேதான் இந்த உலோக வட்டுக்களை 'ரேட் கார்டுகள்' என அழைக்கின்றனர். பிரம்மாண்டமான கப்பலை சாதாரண எலி என்ன செய்து விடும்? என நீங்கள் நினைக்கலாம். 'நான் ஈ' படத்தில் சாதாரண 'ஈ' ஒன்று வில்லனை வாட்டி வதைப்பது போல், இங்கே எலிகள் கப்பலுக்கு மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நாம் சாதாரணமாக நினைக்கும் எலிகளால், கப்பல்களுக்கு மிக நீண்ட காலமாகவே அதிகளவில் பிரச்னைகள் இருந்து வருகின்றன. தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்திலும் கூட எலிகளை கட்டுப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது. கப்பல்களில் உள்ள மீனின் வாசனை மற்றும் இதர உணவுகளால் எலிகள் ஈர்க்கப்படுகின்றன.

எனவே எலிகளை கட்டுப்படுத்துவதற்காக கப்பல்களிலும், துறைமுகங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எலிகளால் ஏற்படும் பிரச்னைகளை தெரிந்து கொண்டால், இந்த பிரச்னையின் தீவிரத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எலிகள் கப்பல்களுக்குள் ஏறி விட்டால், அதில் பயணம் செய்யபவர்களுக்கு உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம்.

எலிகள் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவலாம். உலகம் முழுவதும் சுமார் 35 நோய்களை எலிகள் பரப்புவதாக கூறப்படுகிறது. எலிகளை கையாள்வதன் மூலம் மனிதர்களுக்கு நேரடியாக நோய்கள் பரவலாம். மேலும் எலிகளின் மலம், சிறுநீர் மற்றும் உமிழ் நீர் மூலமாகவும் மனிதர்களுக்கு நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.

எலிகள் கடித்த உணவு பொருட்கள் மூலமாகவும் நோய் பரவும். எனவே கப்பல்கள் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் எலிகள் ஆபத்தானவைதான். கப்பல்களில் ஆபத்து சற்று அதிகம். ஏனெனில் கப்பல்கள் மிக நீண்ட காலம் கடலில் பயணிக்கும். பயணிகளில் யாருக்காவது எலிகள் மூலம் ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால், கப்பலிலேயே சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இருக்கும்.

எனினும் சில சமயங்களில் நிலைமை மோசமடையலாம். அப்படிப்பட்ட சமயங்களில் சம்பந்தப்பட்ட பயணி உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டியிருக்கும். நீண்ட காலம், நீண்ட தொலைவு பயணிக்கும் கப்பல்கள் உடனடியாக கரைக்கு திரும்புவது சிரமமான காரியம். அத்துடன் எலிகள் மூலம் ஒரு பயணிக்கு நோய் தொற்றினால், அது மற்றவர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.

அத்துடன் எலிகள் கப்பல்களின் வயர்கள் போன்றவற்றை கடித்து விட்டாலும் கூட, மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது கப்பல் பாதுகாப்பாக கரைக்கு திரும்புவதில் சந்தேகத்தை ஏற்படுத்தி விடும். எனவே கப்பல்களுக்கு எலிகள் எப்போதுமே மிகவும் ஆபத்தான ஒன்றாகதான் பார்க்கப்படுகின்றன.

எனவே துறைமுகங்களில் எலிகள் வேட்டையாடப்படுகின்றன. விஷம் வைத்து கொல்லப்படுகின்றன. அவை கப்பல்களில் ஏறாமல் இருப்பதற்கு துறைமுகங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கப்பல்களை கட்டி வைக்கும் கயிறு அல்லது சங்கிலியில் உலோக வட்டுக்களை வைப்பது இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

கப்பலை கட்டி வைக்கும் கயிறு அல்லது சங்கிலிதான், துறைமுகத்தில் இருந்து எலிகள் கப்பலில் ஏறுவதற்கு இருக்கும் ஒரே மற்றும் முக்கியமான வழி. இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். எலிகளால் நீச்சல் அடிக்க முடியும். அப்படியானால் நீந்தி வந்து எலிகள் கப்பலில் ஏறி விடாதா? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வந்திருக்கலாம்.

அது கிட்டத்தட்ட வாய்ப்பில்லாத ஒரு விஷயம். ஏனெனில் எலிகள் நீந்தி வந்தால், உயரமாக உள்ள கப்பலில் ஏற வேண்டும். கப்பலின் உடற்பகுதி ஸ்டீலால் செய்யப்பட்டிருக்கும். இது ஈரமாக இருக்கும் என்பதால், எலிகள் ஏறுவது கடினம். ஆனால் கப்பல் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலிகள் மூலம் எலிகள் கப்பலில் மிக எளிதாக ஏறி விடும்.

ஏனெனில் எலிகள் ஏறுவதற்கு தேவையான 'க்ரிப்' இந்த கயிறு அல்லது சங்கிலிகளில் கிடைக்கும். இந்த 'க்ரிப்' மூலமாக எலிகள் மிகவும் சௌகரியமாக கப்பலில் ஏறி விடும். எனவேதான் துறைமுகத்தில் இருந்து எலிகள் கப்பலில் ஏறுவதற்கு இருக்கும் ஒரே மற்றும் முக்கியமான வழி என்று, இந்த கயிறு மற்றும் சங்கிலிகளை கூறுகிறோம்.

இதை தடுப்பதற்காகதான் ரேட் கார்டுகள், அதாவது உலோக வட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, கயிறு அல்லது சங்கிலியை சுற்றி இந்த உலோக வட்டுக்கள் நன்றாக சுழலும். எனவே இதன் மீது ஏறுவதற்கு எலிகள் முயற்சி செய்தால் அவை கீழே விழுந்து விடும். இதற்காகதான் கப்பல் கட்டி வைக்கப்படும் கயிறு மற்றும் சங்கிலிகளில் உலோக வட்டுக்களை பொருத்துகின்றனர்.

இதன் மூலம் எலிகள் கப்பல்களுக்குள் வருவது தடுக்கப்படுகிறது. இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பொதுவாக இந்த உலோக வட்டுக்களை கப்பலின் உடற்பகுதிக்கு மிகவும் நெருக்கமாக பொருத்த மாட்டார்கள். ஏனெனில் கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டால், எலி எளிதாக கப்பலுக்குள் தாவி விடும். எனவே கப்பலின் உடற்பகுதியில் இருந்து இடைவெளி விட்டுதான் இந்த உலோக வட்டுக்களை வைப்பார்கள்.

எலிகள் கப்பலில் ஏறி விடாமல் இருப்பதற்காக துறைமுகங்களில் நிறைய பேர் பணியாற்றுவார்கள். ஆனால் இதையும் மீறி வேறு ஏதேனும் ஒரு வழியில் எலிகள் கப்பலுக்குள் ஏறி விட்டால், பொறிகள் மூலம் அவற்றை அழித்து விடுவார்கள். கப்பல் கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, எலிகள் இருப்பது கண்டறியப்பட்டால் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக