சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூர் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னை-தாம்பரம் செல்லும் வழியில் பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் நங்கநல்லூரில் உள்ள எம்.எம்.டி.சி காலனியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி யோக நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பு.
இங்கு மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
நரசிம்மரின் மேல் இருக்கும் இரு கரங்களில் சங்கு, சக்கரம் மற்றும் வலது கீழ்கரத்தில் அபயமுத்திரையும், இடது கீழ்கரத்தில் மகாலட்சுமியை அணைத்தபடியும் நான்கு கரத்தினை கொண்டு ஆனந்த திருக்கோலத்தில் நரசிம்மர் காட்சி தருகின்றார்.
இத்தலத்தில் சீனிவாசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்கள், ஆண்டாள், வேதாந்த தேசிகர் ஆகியோர் சன்னதிகளும் அமைந்துள்ளன.
வேறென்ன சிறப்பு?
சில காலங்களுக்கு முன்பு இங்கு விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன்பிறகு இந்த இடத்தின் கீழ் ஒரு ஆலயம் புதைந்துள்ளது தெரியவந்தது. பின் கிருஷ்ணரும், நரசிம்மரும் இணைந்து காட்சியளிப்பதால் இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில் என பெயரிடப்பட்டது.
ஆலயத்தின் கருவறைக்கு ஒருபுறம் ஸ்ரீ ராமர் சீதா தேவியோடும், இளையப் பெருமாளோடும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவருக்கு எதிரே ஆஞ்சநேயர் கைகூப்பியபடி அருள்கிறார்.
இந்த ஆஞ்சநேயருக்கு 'அமெரிக்க ஆஞ்சநேயர்" என்ற செல்ல பெயரும் உண்டு. இவரை வேண்டிக் கொண்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமையும் என்பது நம்பிக்கை.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி என்னும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் 'சரடு உற்சவம்" சிறப்பாக நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் செய்யும் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் அங்குள்ள சக்கரத்தின் மீது இரு கைகளையும் வைத்து வேண்டினால் மனதுக்குள் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இங்கு மூலவரான லட்சுமி நரசிம்மப் பெருமாளுக்கு வெண்ணெய், புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன்கள் செலுத்துகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக