விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கூவாகம் என்ற பகுதியில் இருக்கும் இந்த கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருக்கும் மூலவர் அரவான். இங்கு சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், சித்திரா பௌர்ணமி நாளானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
மனதில் அரவானை நினைத்துக்கொண்டு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்கு இந்த கோவிலில் மிகவும் விசேஷம். இந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் சடங்குக்கு காரணமாக மகாபாரதப் போரின் பின்னணியில் புராணக் கதைகள் கூறப்படுகிறது.
மகாபாரத் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக அர்ஜூனனின் மகன் அரவான் பலிகொடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பலியிடப்படுவதற்கு முன்னர் அரவானின் இறுதி ஆசையான பெண்ணை மணந்து இல்லறவாழ்க்கையில் இணைவதற்காக கிருஷ்ணன், பெண் வேடம் ஏற்றுவருகிறார். இந்தப் பின்னணியில்தான் திருநங்கைகள் இங்கு வந்து தாலி கட்டிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஐந்தாம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 19ஆம் தேதி திருநங்கைகள் தாலிகட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 20ஆம் தேதி காலை தேர் திருவிழாவும் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளை சேலை உடுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக