பொதுவாக பயாலஜி, ஜுவாலஜி என்ற வார்த்தையை கேட்டாலே தூரம் ஓடும் சினிமா ரசிகன் இந்த ஆந்தாலஜிக்கு மட்டும் அடிமை ஆனான். ஆந்தாலஜி என்றால் என்ன? ஒரே மாதிரியான ஜானரில் வெவ்வேறு கதைகளை வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரே படமாக அது வெளியிடப்பட்டால், அந்த சினிமாவுக்கு பெயர் தான் ஆந்தாலஜி. தமிழ் திரையில் வெளியான முதல் ஆந்தாலஜி சினிமா தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ். நான்கு கோணங்களில் நான்கு கதையம்சங்களை வைத்து ஒரு புள்ளியில் சேரும் கதையாக அமைந்திருந்தது இத்திரைப்படம்.
இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கி வெளியான திரைப்படம் ’சில்லு கருப்பட்டி’. தொலைந்து போன வைர மோதிரத்தை ஒரு குப்பையில் இருந்து எடுத்து அதனை பணக்கார குடும்பத்தில் உள்ள பெண்ணிடம் தரும் ஒரு குப்பத்து சிறுவனின் காதலையும், வாழ்க்கை வெறுத்துப் போனவனின் வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்படுவதும், தனிமையில் வாழும் வயதானவர்களின் உணர்ச்சியையும், அன்புக்கு ஏங்கும் மனைவியைப் பற்றியும் நான்கு பாகங்களாக சொன்னது இத்திரை தொகுப்பு.
தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து படைத்திட்ட ஆந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புது காலை’, வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து இயக்கிய ‘பாவ கதைகள்’, கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியிருந்த ‘குட்டி ஸ்டோரி’ மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ’நவரசா’ ஆகிய படைப்புகள் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்பட்ட ஆந்தாலஜி வகை திரைப்படங்களாக உள்ளன. ஆந்தாலஜி படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால், அவற்றின் தயாரிப்பு தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக