உலகளவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அப்படி இருக்கையில், ஒரு நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் ஸ்மார்ட்போனுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்ற கேள்வி வரலாம். அதற்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த செய்தித் தொகுப்பில் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபோனுக்கு இணை போட்டி
ஐபோனுக்கு இணை போட்டியாக தங்களது சாதனம் இருக்கும், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான ஸ்மார்ட்போன்கள் இதுவரை சந்தையில் வெளி வரவில்லை, இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு என்றே வருகிறது நத்திங் போன் (1). இப்படி கூறியவர் வேறு யாரும் இல்லை, நத்திங் நிறுவன சிஇஓ மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய் தான். அப்போது இருந்தே இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எழத் தொடங்கி விட்டது.
இந்தியர்களை குஷிப்படுத்தும் விதமான ஒரு அறிவிப்பு
லண்டனை தலைமையிடமாக கொண்டு நத்திங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு சாதனம் Ear(1) என்ற இயர்பட்ஸ் ஆகும். தற்போது இந்த நிறுவனம் தன் தயாரிப்பின் கீழ் இரண்டாவது சாதனமாக நத்திங் போன் (1) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது இந்தியர்களை குஷிப்படுத்தும் விதமான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தயாரிப்பு
நத்திங் போன் (1) ஆனது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தயாரிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நத்திங் இந்திய துணைத் தலைவர் மனு சர்மா உறுதிப்படுத்தினார். ஐபோனுக்கு இணை போட்டியாக சாதனம் இருக்கும் என கார்ல் பெய் அறிவித்த நிலையில் இதன் விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி வரலாம். இந்தியர்களுக்கு இணக்கமான விலையில் சாதனத்தை அறிமுகம் செய்ய நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. அது ஏன் இந்தியாவுக்கு மட்டும் இந்த சலுகை என்ற கேள்வி வரலாம்.
இந்தியர்களுக்கு இணக்கமான விலை
உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆர்வம் காட்டுவது ஆச்சரியப்படும் விதமாக இல்லை. அதேபோல் சாதனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்சத்தில் வரி சலுகைகள் கிடைக்கும். இதன்மூலம் இந்தியர்களுக்கு இணக்கமான விலையில் சாதனங்கள் விற்கலாம். இந்த சாதனம் உண்மையில் ஐபோனுக்கு போட்டி போடும் விதமாக இருக்கிறதா, அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தகவல்கள் இருக்கிறதா என்றால் இருக்கிறது.
ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம்
ஜூலை 12 ஆம் தேதி நத்திங் போன் (1) அறிமுகமாக இருக்கிறது. இந்த சாதனத்தின் உள்கட்டமைப்பு குறித்த புகைப்படம் பிளிப்கார்ட்டில் வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்தின் படி இதன் உள்கட்டமைப்பு ஐபோனுக்கு ஒத்ததாகவே இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் சென்னையில் தயாரிக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இது சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் அல்லது பெகட்ரான் மொபைல் உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலைகள் தான் ஆப்பிள் ஐபோன் தயாரிப்புகளை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
பிளிப்கார்ட் மூலமாக விற்பனை
நத்திங் போன் (1) ஆனது இந்தியா உட்பட உலகின் பல நாட்டு சந்தைகளில் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆன்லைன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு நடத்தப்படும். இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதையும் பார்க்கலாம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படும்
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் நத்திங் போன் (1) ஆனது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சிப்செட் ஆனது நேர்த்தியான மற்றும் வேகமான பயனர் அனுபவத்தை வழங்கும். இந்த சாதனம் 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் வெளியாகலாம்.
நத்திங் போன் (1) அம்சங்கள்
நத்திங் போன் (1) ஆனது 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வெளியாகும் என சமீபத்திய கசிவுகள் தெரிவித்தன. அதேபோல் இந்த சாதனம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதை பிராண்ட் முன்னதாகவே உறுதிப்படுத்தியது. நத்திங் போன் (1) சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் (1) விலை குறித்த பல கருத்துகள் வெளியாகிறது. எனவே விலை குறித்து குறிப்பிட முடியவில்லை. இருப்பினும் இந்த சாதனம் இந்தியர்களுக்கு இணக்கமான விலையில் அறிமுகமாகும் என்பது மட்டும் கணிக்கப்படுகிறது.
இரட்டை பின்புற கேமரா அமைப்பு
நத்திங் போன் (1) பிரத்யேக வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் என இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் ஒற்றை எல்இடி பிளாஷ் உடன் முதன்மையான தோற்றத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இரட்டை கேமரா மட்டும் தானா என்ற சிந்திக்க வேண்டாம், ஐபோனும் இதேபோல் இரண்டு அல்லது மூன்று கேமராக்கள் உடன் தான் வருகிறது. ஐபோனின் புகைப்படத் தரம் அனைவரும் அறிந்ததே.
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 போன்ற பிளாட் பேனல் டிஸ்ப்ளே இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பும் தகவல்களும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. சாதனம் அறிமுகம் செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லை. எனவே காத்திருந்து பார்க்கலாம் இந்த சாதனம் ஐபோனுக்கு இணை போட்டியாக இருக்குமா என்று.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக