Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பங்கு சந்தை: ஒரு அறிமுகம் (An Introduction to Share Market)


intro
Introduction to Share Market in Tamil
பங்கு சந்தை என்றால் என்ன? பங்கு சந்தை என்றால் என்ன  என்று தெரிந்து கொள்ள, பங்கு - சந்தை இந்த இரண்டு வார்த்தைகளையும் பிரித்து பொருள் என்ன என்று பார்ப்போம். பங்கு என்றல் என்ன? பங்கு என்பது விலை மதிப்புள்ள ஒரு பொருளில் ஒருவருக்கு உள்ள உரிமையின் அளவை குறிப்பது (உ.ம். 5 ஏக்கர் உள்ள பரம்பரை நிலத்திற்கு உரிமையானவர்கள் 10 பேர் என்றால், ஒரு பங்கின் அளவு 50 சென்ட்). சந்தை என்றால் என்ன? சந்தை என்பது ஒரு பொருளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களும், விற்பதற்கு வியாபாரிகளும் கூடும் இடம். பங்கு சந்தை என்பது, ஒரு நிறுவனத்தின் பங்கை (அதாவது நிறுவனத்தின் உரிமையில் ஒரு பங்கினை) வாங்குவதற்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களும், பங்கினை விற்பதற்கு ஒரு நிறுவனமும் அல்லது ஏற்கனவே அந்த நிறுவனத்தின் பங்கினை வைத்திருப்பவர்களும் கூடும் இடம். இந்தியாவில் இரண்டு பங்கு சந்தைகள் உள்ளன - ஒன்று BSE  என்று சுருக்கமாக அழைக்கப்படும் Bombay Stock Exchange, இன்னொன்று NSE என்று சுருக்கமாக அழைக்கப்படும் National Stock Exchange. ஒரு நிறுவனம் அதன் பங்கினை Retail Investors என்றழைக்கப்படும் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டுமென்றால் BSE அல்லது NSE அல்லது இரண்டிலும் அந்த நிறுவனத்தை பங்கு வர்த்தகத்திற்காக பதிவு செய்ய வேண்டும். பங்கினை வாங்க வேண்டிய சிறு முதலீட்டாளர்கள், BSE  அல்லது NSE-யில் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இந்த பங்கு சந்தைகளில் வர்த்தகம் செய்ய உரிமையுள்ள எதாவது ஒரு ப்ரோகரின் மூலமாகவே பங்கினை வாங்க முடியும்.

BSE-ல் 5500க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், NSE -ல் 1700 நிறுவனங்களும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட பதிவு செய்துள்ளன. இவ்வாறு பங்கு சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் வாங்கி - விற்கப்பட்டு அதிகமான பணபுழக்கம் இருப்பதால், வலியவர்கள் எளியவர்களை ஏமாற்றும் வாய்ப்புக்கள் அதிகம், எனவே இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களின் உரிமையை பாதுகாக்கவும், அவர்களை எமாற்றுவதிலிருந்து அல்லது ஏமாற்றப்படுவதிலிருந்து தடுக்கவும் ஒரு வலிமையான அமைப்பு தேவை. அதுதான் SEBI என்று சுருக்கமாக அழைக்கப்படும் Securities and Exchange Board of India. SEBI பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ப்ரோக்கர்கள் போன்றவர்களுக்கான விதிகளை வரையறுத்து, இந்த விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, விதி மீறல்கள் நடை பெறும்போது விதியை மீறுபவர்களுக்கு தண்டனை கொடுத்து பங்கு வர்த்தகத்தில் ஒளிவு மறைவில்லா நேர்மையான வர்த்தகம் நடை பெற துணையாய் இருக்கிறது.

இந்த பங்கு சந்தைகளின் தற்போதைய நிலவரத்தை எப்படி தெரிந்து கொள்வது? BSE -ல் 5500 பங்குகள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன, BSE-யின் நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த 5500 பங்குகளின் விலையையும் ஆராய்வது கடினம். அதே போல NSE -ன் நிலவரத்தை தெரிந்து கொள்ள அதில் வர்த்தகம் செய்யப்படுகின்ற 1700 பங்குகளின் விலையையும் ஆராய்வதும் கடினம். ஆகவே, BSE -ன் நிலவரத்தை தெரிந்து கொள்ள, SENSEX என்ற ஒரு குறியீடும், NSE-ன் நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள NIFTY என்ற ஒரு குறியீடும் உள்ளது. BSE -ன் SENSEX, BSE -ல் வர்த்தகம் செய்யப்படுகின்ற, வெவ்வேறு தொழில்துறையை சார்ந்த 30 நிறுவனங்களின் பங்கு விலையை கொண்டு ஒரு Algorithm மூலம் கணக்கிடபடுகிறது. அதே போல, NSE -ன் NIFTY NSE -ல் வர்த்தகம் செய்யப்படுகின்ற, வெவ்வேறு தொழில்துறையை சார்ந்த 50 நிறுவனங்களின் பங்கு விலையை கொண்டு ஒரு Algorithm மூலம் கணக்கிடபடுகிறது. SENSEX எண்ணில் ஏற்றம் இருந்தால், BSE -ல் உள்ள பெருவாரியான பங்குகளின் விலை ஏறி இருக்கும். அதே போல, NIFTY -ல் ஏற்றம் இருந்தால், NSE -ல் உள்ள பெருவாரியான பங்குகளின் விலை ஏறி இருக்கும்.


பங்கு சந்தை பற்றி வர்த்தக முறை பற்றி எளிதாக புரிந்து கொள்ள, நமக்கு மிகவும் அறிமுகமான, பங்கு சந்தை போலவே வர்த்தக முறைகள் உள்ள வீட்டு மனை வர்த்தகதில் நாம் என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். வீட் டு மனை வாங்குவதில், முதல் வேலையாக, ஒருவர் செய்வது அவருக்கு நல்ல பரிச்சையமான அல்லது தெரந்தவர்கள் மூலமாக அறிமுகமாகிற  ஒரு நம்பகமான ப்ரோக்கரை கண்டுபிடிப்பது. அதற்கடுத்து, அந்த ப்ரோகர் மூலமாக, எந்த எந்த இடங்களில் நல்ல வீட்டு மனைகள் உள்ளன, அந்த இடங்கள் கடந்த சில வருடங்களில் எவ்வளவு விலை உயர்ந்துள்ளன,  இனி எதிர்காலத்தில் விலை ஏறுவதற்கு என்ன வாய்ப்புக்கள் உள்ளன, இந்த விசயங்கள் பற்றி இடம் வாங்க விரும்புபவர் தெரிந்து கொள்வார். அவருக்கு பிடித்த,  விலை ஏறும் என்ற நம்பிக்கை வருகிற இடம் கிடைத்த பிறகு, அந்த இடத்தின் உரிமையாளர் பற்றி மற்றும் அந்த இடத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என்பது பற்றிய விவரங்களை வாங்குபவர் ஆராய்வார். எல்லாம் திருப்திகரமா இருந்தால், அந்த இடத்தை வாங்க முடிவு செய்து, தன் முடிவை ப்ரோகரிடம் சொல்வர். வாங்குபவரின் விருப்பம் தெரிந்தவுடன், ப்ரோகர், விற்பவரை தொடர்பு கொண்டு, வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் ஏற்ற ஒரு விலையை நிர்ணயம் செய்ய பேச்சு வார்த்தை நடத்துவார். விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பவருக்கு நிலத்திற்கான பணம் கொடுக்கப்பட்டவுடன், வாங்குபவரின் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டு பாட்டா கொடுக்கப்படும். இடம் பற்றி விவிரங்களை கொடுத்தது, விற்பவரிடம் பேசி விற்பவர் மற்றும் வாங்குபவர் இருவரும் ஒப்புதல் தெரிவித்த விலையை நிர்ணயம் செய்தது, இடத்தை பதிவு செய்வதில் உதவி செய்தது போன்ற சேவைகளுக்காக, ப்ரோகர் வர்த்தக விலையில் ஒரு சதவீதத்தை கமிஸனாக பெற்றுக்கொள்வார்.

கிட்டத்தட்ட, இதே போன்ற நடைமுறைகள் உள்ள வர்த்தகம் பங்கு சந்தை.
வீட்டு மனை வாங்க ஒரு ப்ரோகர் தேவைப்படுவது போல, பங்கு சந்தையில் பங்கை வாங்க, ஒரு ப்ரோகர் தேவை. SBICapSecurities, ICICI Direct, Sharekhan, Kotak Securities, Zerodha போன்றவர்கள், பங்கு சந்தையில் பங்கு வாங்க, விற்க உதவும் ப்ரோகர்கள். வீட்டு மனை பற்றிய விவரங்களை ப்ரோகர் நமக்கு சொல்வது போல, பங்கு வர்த்தக ப்ரோகர்கள் எந்த பங்கை வாங்கலாம் என்ற பரிந்துரைகளை தருவார்கள். வீட்டு மனை வாங்கும் போது, அந்த இடத்தை பற்றிய அனைத்து விவரங்களை அலசுவது போல (அந்த இடம் கடந்த சில வருடங்களில் எந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது, இப்போதைய சந்தை நிலவரப்படி நிலத்தின் விலை சரியா, எதிர்காலத்தில் விலை உயர வாய்ப்புக்கள் என்ன) ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது, இது வரை அந்த நிறுவனத்தின் பங்கு விலை எவ்வாறு உயர்ந்துள்ளது, வியாபாரம், லாபம் எந்த அளவுக்கு உயர்ந்து வருகிறது, செலவுகள் எந்த அளவுக்கு குறைந்து வருகிறது, நிறுவனம் கடன் எவ்வளவு வாங்கியுள்ளது,   மற்றும் மிக முக்கியமாக, எதிர்காலத்தில் எந்த அளவுக்கு நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் லாபம் அதிகமாக வாய்ப்புக்கள் உள்ளன போன்ற விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டு மனை வாங்க எந்த அளவு யோசனை செய்து, விவரங்களை சேகரித்து வாங்குவொமோ, அதே போல, பங்கு வாங்குவதிலும் அதே அளவு விவரங்களை சேகரித்து, நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு, எதிர்கால வியாபார விஸ்தாரிப்பு வாய்ப்புகள் போன்றவற்றை ஆராய்வது அவசியம். முக்கியமாக, வீட்டு மனை வாங்கும்போது எவ்வாறு நாம் சேகரித்த பணத்தில் நமக்கு உடனடியாக (குறைந்தது 1 வருடம் ) தேவைப்படாத பணத்தை முதலீடு செய்வோமோ, அதே போல, பங்கு வாங்குவதிலும் நமக்கு உடனடியாக (குறைந்தது 1 வருடம் ) தேவைப்படாத பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

வீட்டு மனை வாங்கும்போது மனைக்கான பத்திரம், பாட்டா வாங்குபவர்க்கு கொடுக்கப்படுவது போல, ஒரு நிறுவன பங்கை வாங்கும்போது நிறுவனத்தின் பங்கு உரிமைக்கான பத்திரமும் பங்கை வாங்கியவர்க்கு கொடுக்கப்படும். ஒரு வித்தியாசம்: பங்கு உரிமைக்கான பத்திரம் காகிதமாக கொடுக்கப்படாமல், வாங்குபவரின் DEMAT அக்கவுண்டில் electronic வடிவில் வரவு வைக்கப்படும். பங்கை விற்பவர்க்கு, பங்கிற்கான பணம் வாங்குபரின் வங்கி கணக்கில் இருந்து, விற்பவர்  கணக்கிற்கு செலுத்தப்படும். வீட்டு மனை விற்பனையில் பெரும்பாலும் பண பரிவர்த்னை Real Money (or Hard cash) ஆக நடைபெறும். ஆனால் அது போல் அல்லாமல், பங்கு வர்த்தகம் அனைத்தும் வங்கி கணக்கு, DEMAT account மற்றும் Trading account ஆகிய மூன்றையும் கொண்டு, இணைய தளம் வழியாக நடைபெரும்.எனவே, பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவருக்கு இந்த மூன்று அக்கவுண்டுகளும் இருப்பது அவசியம் :
  1. DEMAT account (பணம் டெபாஸிட் செய்ய வங்கி கணக்குகள் இருப்பது போல, வாங்கிய பங்குகளை டெபாஸிட் செய்ய தேவைப்படுகிற அக்கவுன்ட் DEMAT account )
  2. Bank Account (வங்கி கணக்கு): பங்கை வாங்கும் போது, வங்கி கணக்கில் இருந்து Trading அக்கவுண்டுக்கு செலுத்தவும், பங்கை விற்றபிறகு, Trading  அக்கவுண்டில் இருந்து, பணத்தை எடுத்துக்கொள்ளவும், வங்கி கணக்கு தேவை. இந்த வங்கி கணக்கு Trading மற்றும் Demat அக்கவுண்டுடன் இணைக்கப்படும்.
  3. Trading Account (பங்கு பரிவர்த்னை கணக்கு): பங்கு சந்தையில் இருந்து பங்கை வாங்கி, நம்முடைய DEMATஅக்கவுண்டில் டெபாஸிட் செய்ய தேவையான ப்ரோகர் account.
இந்த 3 அக்கவுண்டுக்களை ஆரம்பிக்க தேவையான ஆதாரங்கள்:
1) PAN card
2) முகவரி ஆதாரம் (Address Proof).
3) புகைப்பட ஆதாரம் (Identity Proof).
4) பாஸ்போர்ட் போட்டோ (Passport size photo).



Disclaimer

இந்த இணைய தளத்தில் எழுதுபவர் பங்கு சந்தை நிபுணரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளரோ அல்ல. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு சாதாரண முதலீட்டாளர். இந்த இணைய பக்கத்தின் நோக்கம் பங்கு சந்தை பற்றி கற்றதை பதிவு செய்வது மட்டுமே. பங்குகளில் முதலீடு செய்பவர்கள்,பங்குகளை வாங்குபவர்கள், வாங்க போகும் பங்குகள் பற்றிய விவரங்களை அவர்களின் சொந்த முயற்சியில் சேகரித்து வாங்குமாறு அறிவுருத்தபடுகிரார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு முதலீடு செய்பவர்களே பொறுப்பு; இந்த இணைய தளத்திற்கோ அல்லது இதில் எழுதுபவர்க்கோ, இதனை படித்து முதலீடு செய்பவரின் லாப நட்டத்தில் எந்த பொறுப்பும் இல்லை. இந்த இணைய தளத்தினை உபயோகப் படுத்த கட்டணம் எதுவும் இல்லை. 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக