ஒரு குழந்தைக்கு பெற்றோராக இருப்பது
அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. பெண்கள் கர்ப்பம் தரித்து, பத்து மாதம்
அதைப் பேணிப் பாதுகாத்து, பிரசவ வலியைக் கடந்து நிறைய போராட்டங்களுக்குப் பிறகு,
குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள்.
அதோடு மட்டும் அவருடைய பொறுப்பு முடிந்துவிடுமா என்ன? அதற்குப்
பிறகு தான் குழந்தையை வளர்ப்பதில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் கைக்குழந்தையைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதனால் தான்
அந்த காலத்தில் பெண் வீட்டில் பிரசவம் பார்த்து, அந்த பெண்ணின் தாயார் குழந்தையைக்
கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்.
முதல் குழந்தைக்குப் பெற்றோராகிறவகளுக்கு இன்னும் பதட்டமும்
பயமும் அதிகமாகவே இருக்கும். அந்த கவலைகளையெல்லாம் விட்டு விட்டு எப்படி
கைக்குழந்தையை பராமரிக்க வேண்டும் என்று உங்களுடைய மருத்துவரிடம் ஆலாசனைப் பெற்று
நடந்து கொள்ளுங்கள். பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து
இந்த தொகுப்பில் மிக விளக்கமாகப் பார்க்கலாம்.
தாய்ப்பால் கொடுப்பது
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள்
தாய்ப்பால் (First hour Breastfeeding) அளிப்பது 22% சதவிகித பிரசவத்துக்கு
பிந்தைய குழந்தைகளின் மரணத்தைத் தடுக்கிறது.
தாயின் முதல் பால், குழந்தைகளுக்கு
சிறந்த நோய்த் தடுப்பு மருந்தாகும். குழந்தைகளைத் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க,
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.
தாய்ப்பால் குடித்த குழந்தைகள்,
அறிவுசார் தேர்வுகளில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளைவிட நன்றாக செயல்படுகிறார்கள்
என்கிறது ஒரு ஆய்வு.
தாய்ப்பாலைத் தொடர்ந்து குடிக்கும்
குழந்தைகளுக்கு தொற்று, நிமோனியா, குடல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்
குறைவு.
முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால்
மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு 2 வயது வரை காதுகளில் தொற்று வரும் வாய்ப்பை
43% குறைக்கிறது.
சமீபத்தில் குழந்தை பெற்ற
அம்மக்களுக்கு
அதிக உடல் எடையை குறைக்க ஒரு ஈஸி வழி
உள்ளது. அதுதான் தாய்ப்பால் கொடுப்பது.
ஆய்வுகளின் படி, தாய்ப்பால் அளிக்கும்
தாய்மார்கள் உடல் எடையை விரைவாக இழக்க முடிகிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களின்
உடல் வடிவத்தை மீண்டும் பெற முடிகிறது.
தாய்ப்பால் அளிக்கும்
தாய்மார்களுக்கு, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய்
ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு. பிரசவத்துக்கு பின்னர் ஏற்படும் ரத்தபோக்கைக்
குறைக்க உதவுகிறது.
எப்போது பாலூட்ட வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி
நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும்.
அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால்
ஊட்ட வேண்டும்.
மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது
அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு கட்டயமாக பால் ஊட்ட
வேண்டும்.
ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு
நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம்.
அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால்
அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.
ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர்
கழித்தாலோ, அல்லது 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால்
கிடைக்கிறது என அர்த்தம்.
குழந்தையின் மலத்தின் நிறம்
கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால்
கிடைக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எடை பரிசோதனை
இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு
வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது
என நாம் அறிந்து கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கின்போது குழந்தையின்
உடலில் தண்ணீர் இழப்பதைத் தடுக்க தாய் இன்னும் அதிக முறை பால் கொடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால், மருத்துவரின்
ஆலோசனைப்படி குழந்தைக்கு மருந்தும் கொடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனைக்குத்
தகுந்தபடி அந்தந்த குறிப்பிட்ட மாதங்களில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து
விகிதத்தை அதிகப்படுத்திக் கொண்டு போகலாம்.
அலுவலகம் செல்லும் தாய்மார்கள்
கவனத்திற்கு
வேளைக்கு செல்லும் தாய்மார்கள்
தாய்ப்பாலை எடுத்து, அறை வெப்பத்தில் 6-8 மணி நேரம் வைக்கலாம்.
முடியாத நிலை என்றால், தாய்ப்பாலை
வெளியேற்றி ஃபிரிட்ஜில் வைத்து குழந்தைக்குத் தேவைப்படும்போது அதன் குளிர் தன்மை
நீங்கிய பின் குழந்தைக்கு தர வேண்டும்.
இப்படி வைக்கப்பட்ட தாய்ப்பாலை வேலை
காரணமாக தாய் வெளியில் இருக்கும்போது குழந்தைக்கு புகட்ட முடியும். வேலைக்கு
நடுவில் பால் ஊட்ட வசதியான ஏற்பாடுகளை தாய்மார்கள் அவசியம் செய்து கொள்ளவேண்டும்.
புட்டிபாலில் பால் கொடுப்பதைத்
தவிர்ப்பது நல்லது. பாட்டிலில் உள்ள நிப்பிள் எளிதில் கிருமித் தொற்று ஏற்பட
வாய்ப்பு உள்ள இடம். இதனால் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும்.
இதனால், குழந்தை சப்பிக் குடிக்கும்
பழக்கத்தைப் பாதிக்கிறது. குழந்தையின் முதல் 6 மாதத்துக்கு கோடை காலம் உள்ளிட்ட
அனைத்து காலத்திலும் தாய்ப்பால் மட்டும்தான் தரவேண்டும். தாய்ப்பாலில் குழந்தைக்கு
தேவையான தண்ணீர் இருக்கிறது. அதனால் எந்த விதமான தண்ணீரும் குழந்தைக்கு
தேவையில்லை.
மற்ற உணவுகளைப் போலவே தண்ணீரும்
குழந்தைக்கு 6 மாதங்கள் நிரம்பிய பிறகே தர வேண்டும். அதற்கு முன்னால் குழந்தைக்கு
தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவு தந்தாலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம்.
கவனிக்க வேண்டியவை
நோய் தொற்றுக்கும் குழந்தை ஆளாகலாம்.
முதல் மாதத்தில் குழந்தையின் காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும்.
மற்ற புலன்களைவிட காது கேட்பது
மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால்
ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். ஒரு அடி தூரத்திற்குள் இருக்கும் பொருட்களை
குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும்.
அதாவது அருகில் உள்ளதை மட்டும்
குழந்தைகளால் பார்க்க முடியும். பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை
நன்றாகத் தெரியும். அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும்.
இதனால் தான் அம்மாவின் குரல்
கேட்டதும் குழந்தைகள் அழுகையை நிறுத்தி விடும். இரண்டு கைகளையும் விரித்து, முதுகை
வில் போன்று குழந்தை வளைக்கும். நம் கவனத்தை மேலும் ஈர்க்கும். குழந்தை பிறந்த
முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது மிகவும் நல்லது.
மருத்துவ ஆலோசனை
குழந்தையின் பாதங்களில் நெருடுதல்
மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப்
புரிந்து கொள்ளலாம். எதிர் பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா
என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம்.
இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி
குழந்தை பார்க்கும். தொப்புள்கொடி மற்றும் தொற்று பாதுகாப்பு. தொப்புள் கொடியை
அறுத்த பின்பு, குழந்தையின் தொப்புள் அருகே கிளிப் மாட்டுவது உண்டு. 2-3
வாரங்களிலே தொப்புள் பகுதி உலர்ந்து, கிளிப் தானாகவே உலர்ந்து விடும். மிகவும்
முக்கியமாக, தொப்புள் பகுதியை கிருமித் தொற்று தாக்காதபடி சுத்தமாக பராமரிக்க
வேண்டும்.
பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு
கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில
நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும்.
கண்கள் மஞ்சளாக இருந்தாலோ,
பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள். பிறந்த
குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித்
துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய்
எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும்.
பிறந்த குழந்தையை தூக்கும் முறை:
நீங்கள் உங்கள் குழந்தையின் தலை
மற்றும் கழுத்தை ஒரு கையால் பிடிக்கும் போது அதை குழந்தை உணர செய்வது மிகவும்
முக்கியம்.
ஏனெனில்,குழந்தையின் கழுத்துப்
தசைகள், தலையை தனியாக பிடித்துக் கொள்ளும் அளவிற்கு இன்னும் வலுவாக இருக்காது.
முதுகெலும்பும் மாதங்கள் செல்ல செல்ல தான் வலு பெரும். குழந்தையின் கழுத்து, 3 மாத
வயதிற்கு பிறகே, நல்ல ஒரு வளர்ச்சி அடையும்.
எனவே பிறந்த குழந்தையை கவனித்துக்
கொள்ளும் போது உங்கள் குழந்தையின் தலை மற்றும் கழுத்தை ஆதரிப்பதில் கவனம்
செலுத்துங்கள். இக்காலகட்டத்தில் வீட்டு பெரியவர்கள் சொல்படி நாம் நடப்பது மிகவும்
நல்லது
முடி வளர்ச்சி
கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு
சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன்
அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும். கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த
காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு
1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும். குழந்தையின் மார்பகம்,
பிறப்புறுப்பு பகுதிகளில் லேசான மாற்றம் தெரியும் சில வாரங்களில் இவை
சரியாகிவிடும்.
குறிப்பாக சில பெண்களுக்கு கர்ப்ப
காலத்தில் வயிற்றுப் பகுதிகளில் அதிக அளவில் அரிப்பு ஏற்படும். அப்படி அதிக
அளவிலாக அரிப்பு ஏற்படும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட சொல்வார்கள்.
வயற்றில் உள்ள குழந்தைக்கு முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று.
கருவறைக்குள் இருக்கும் போது அச்த வெப்ப சீதோஷண நிலையில் குழந்தையின் முடி
வளர்ச்சி அதிகமாகத் தூண்டப்படுகிறது.
குழந்தைகள் தூங்கும் நேரம்
பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது
அவசியம் தூங்க வேண்டும்.
பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே
இருக்கும்.
இரவில் 3-4 முறை, பகலில்
தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே,
குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை
செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
குழந்தை விழித்திருக்கும்போது, தாய்
குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.
வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லுதல்
குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக
இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி
இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு
வெளியே செல்ல வேண்டாம். ஹோட்டல், திரையரங்குகள், உயிர் நீத்தோர் இடத்துக்கு இப்படி
எங்கும் செல்ல கூடாது. ஏனெனில் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு நிமோனியா (pneumonia),
சீதபேதி, பூச்சித் தொற்று போன்ற நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க
வேண்டும். இவை வராமல் தடுப்பதும் நல்லது.
குழந்தைகளின் முதல் பிறந்த நாளுக்குள்
தேவையான நோய்த் தடுப்பு சிகிச்சைகளை (proper treatments) முறையே அளித்திருக்க
வேண்டும். தாயும் சேயும் நல்ல மனநிலையில் இருக்கும் சூழலை உருவாக்கி கொள்ளுதல்
மிகவும் அவசியம்.
உணவு உண்பதற்கு முன்பும் கழிப்பறை
பயன்படுத்திய பின்னரும் நன்றாக சோப்/ஹாண்ட் வாஷ்ஷால் கை கழுவ வேண்டும். இது நோய்
தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக