Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஏப்ரல், 2020

30 வயதைத் தாண்டும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய விஷயங்கள் என்னென்ன?


வயதாக வயதாக நோய்களும் நம்மை தாக்கும் அபாயம் அதிகமாகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இதய நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய்கள் வரும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்த பாதிப்பிலிருந்து ஆண்கள் தங்களை காத்துக் கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வயது முதுமை அடையும் போது நோய் இளமை அடையும் என்று கூறுவார்கள். எனவே தான் நமக்கு வயதாகும் போது ஏராளமான நோய்கள் நம்மை தொற்றை அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆகும் போது இதய நோய்கள், சர்க்கரை நோய்கள் போன்ற நோய்களால் பாதிப்படைகின்றனர். எனவே ஒவ்வொரு ஆணும் 30 வயதை அடையும் போது தங்களது உடம்பை ஆரோக்கியமாக வைக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த வயதில் உங்க உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் நேரம் இது. அதற்காக நீங்கள் ரெம்ப பெரிய மெனக்கெடல்களை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஓரளவு சிறிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் என்று உங்க வாழ்நாளை செதுக்கி வந்தாலே போதும் உங்க ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியும். இன்று உலக சுகாதார தினம் இந்த நாளில் உங்க ஆரோக்கியத்தை பேண உறுதி மொழி எடுங்கள். அதற்கு நாங்களும் உங்களுக்கு கை கொடுக்கிறோம். ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றி வரலாம்.

யோகா பயிற்சி

உங்கள் இளமையை திரும்பப் பெற உதவுவதில் யோகா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 30 வயதிற்கு முன்பு வரை உங்க உடல் வலிமையாக இருந்து இருக்கலாம். உங்க குழந்தைகளுடன் ஓடியாடி நீங்கள் விளையாண்டு இருக்கலாம். ஆனால் 30 வயதை கடந்த உடன் தற்போது உங்க சகிப்புத்தன்மையும் ஆற்றலும் குறைய ஆரம்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஆண்கள் தங்களுடைய முக்கால்வாசியான நேரங்களை அலுவலக நாற்காலிலயே கடத்துகின்றனர். இதனால் உங்க தசைகள் பலவீனம் ஆகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. இதய நோய்கள் முதல் சர்க்கரை நோய்கள் வரை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஆண்கள் இதை கவனிப்பதில்லை. முதலில் உங்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். அதற்கு வீட்டில் கொஞ்ச நோரமாவது யோகா செய்யுங்கள். இது உங்க தசைகள் நீட்சியை பெறவும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

உங்க பிறப்புறுப்பை கவனியுங்கள்

ஆண்களுக்கு வயதாக வயதாக புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயமும் அதிகரிக்கிறது. 10,000 ஆண்களில் 1 நபர் 40 வயதிற்கும் குறைவான வயதிலேயே புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். எனவே ஆண்கள் இந்த பிரச்சினை குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உங்க பிறப்புறுப்பில் ஏதேனும் மாற்றங்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

அறிகுறிகள்

விறைப்புத்தன்மை பிரச்சனை

சிறுநீர் கழிக்கும் போது அல்லது விந்து வெளியேறும் போது இரத்தம் அல்லது வலி உண்டாதல்

குறிப்பாக இரவில் சிறுநீர் கழித்தல் அதிகமாகுதல்.

சிறுநீர் தடைபடுதல், சிறுநீர் வெளியேற்றுவதில் கடினம் உண்டாதல். போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

சோர்வு, வலிமை குறைந்து போதல்

செக்ஸ் ஆர்வம் குறைவு போன்ற அறிகுறிகள்

தென்பட வாய்ப்புள்ளது.

வேலை, உடல் அலுப்பின் காரணமாகத் தான் தூக்கமின்மை பிரச்சினை உண்டாகிறது என்று நீங்களாக எதையாவது நினைத்துக் கொண்டு, அஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த மாதிரி தென்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

குறைவாக சாப்பிடுங்கள்

30 வயதை கடந்தவர்களுக்கு கொழுப்பு அதிகரிப்பு என்பது எளிதாக நடந்து விடும். இதனால் உடல் பருமன், தொப்பை போன்ற ஏராளமான பிரச்சனைகள் உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணமாக உங்க உணவுப் பழக்கம் ஏற்படுகிறது. எனவே உங்க உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். அதற்காக பிடித்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று அர்த்தம் இல்லை. சாப்பிடும் அளவை குறையுங்கள். குறைந்த கலோரிகளை பெறுங்கள். இதனால் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவது சரியாகி விடும். எனவே உணவை குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க முற்படுங்கள்.

நீங்கள் 30 வயதை கடந்த ஆண்களாக இருந்தால் 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் அடிக்கடி பரிசோதனை செய்வது நோய் பாதிப்பு ஏற்படுவதை முன்னரே தடுக்க உதவும். அதே மாதிரி ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் டெஸ்டிகுலார் புற்றுநோய். கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

விந்துப்பை வலி

விந்தணுக்களில் வலி அல்லது விந்தணுப்பையில் வலி உண்டாதல்.

அடிவயிற்று வலி அல்லது இடுப்பு வலி

சோர்வு

விதைப்பை கடினமாக உணர்தல்​

உடற்பயிற்சி வழக்கத்தை பராமரியுங்கள்

இந்த 30 வயதில் உங்க உடலை வலுப்படுத்த நினைக்க வேண்டும். எனவே அதற்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தினசரி நடவடிக்கையாக மாற்ற வேண்டும்.சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றலுடன் உங்கள் உடம்பிற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்வதெற்கெல்லாம் நேரமில்லை என்று ஒதுக்காதீர்கள். இந்த வயதில் உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனம் கொண்டால், பின்னால் சில வருடங்கள் கழித்து மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.​

எலும்பு ஆரோக்கியம்

30 வயதிற்கு மேற்பட்ட காலத்தில் ஆண்கள் எலும்புகளில் வலிமையை இழக்க ஆரம்பிக்கிறார்கள். எனவே அவர்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே ஸ்கேன் செய்து அதை சரி செய்ய முற்படுங்கள். குறிப்பாக உடல் செயல்பாடு, புகைப்பழக்கம் அல்லது ஆஸ்டியோபோரோசிஸின் குடும்ப வரலாறு இருந்தால் விழிப்புணர்வோடு செயல்படுங்கள். அதே எலும்பின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய கால்சியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தினசரி உணவில் 400 IU வைட்டமின் டி உடன் 1,000 மில்லிகிராம் கால்சியம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சிறிய விஷயங்களையும் அனுபவியுங்கள், சந்தோஷம் கொள்ளுங்கள்

நிறைய உடல்நல பாதிப்புகள் நம்மை தாக்க மன அழுத்தம் முக்கிய காரணமாக அமைகிறது. பல ஆண்டுகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனைகள், இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. இருப்பினும் நீங்கள் மன அழுத்தம் கொள்வதால் எதுவும் சரி ஆகாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உங்கள் அன்புக் குரியவருடன் நேரத்தை செலவிடுங்கள். சின்ன சின்ன விஷயங்களை கண்டு ரசியுங்கள், மகிழுங்கள். பயணத்திற்கு என்று தனி நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழுங்கள். மற்றவருக்கு உதவி செய்யுங்கள். இது போன்ற சிறிய விஷயங்கள் உங்களை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றும். நீங்களும் நோய் நொடி இல்லாமல் வாழ முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மன அழுத்தம் நீங்க தேவைப்பட்டால் மருத்துவரை அணுகியும் சிகிச்சை பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக