செவ்வாய், 12 மே, 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி018

கழற்சிங்க நாயனார் !!

காடவர் குலத்தில், எம்பெருமானின் திருவடிகளையே அன்றி வேறு எதையும் அறியாத கழற்சிங்க நாயனார் என்பவர் இருந்தார். அவர் பல்லவ நாட்டை எம்பெருமானின் திருவருளால் அறநெறி குன்றாது அரசாட்சி செய்து வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை எம்பெருமானின் அருளால் போரில் வென்று வெற்றி வாகை சூடி அவர்கள் நாடுகளைக் கவர்ந்து பொன்னும், பொருளும் பெற்றார். பொருட்களை பெற்றது மட்டுமல்லாமல் அவர் நாடெங்கும் சைவ, சமயம் தழைத்தோங்கும்படி அரசாண்டார். மேலும் போரில் வெற்றி பெற்று கிடைத்த நிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார்.

இவ்விதமாக கிடைத்த பொருட்களை கொண்டு சிவத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்தும், திருத்தொண்டு செய்து கொண்டும் இருந்தார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் தரிசனம் செய்ய எண்ணினார். அதன் பொருட்டு தமது துணைவியுடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டு திருவாரூரை அடைந்த நாயனார் பிறைமுடிப் பெருமான் குடிக்கொண்டிருக்கும் திருத்தலத்தை அடைந்தார்.

திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட நாயகரின் முன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். இப்பெருமானின் அருள்வடிவத்தில் மெய்மறந்து விழிகளிலேயே ஆனந்த கண்ணீர் மல்க உள்ளத்தில் அன்பு பொங்கப் பக்தியிலேயே மூழ்கி வழிபட்டுக் கொண்டிருந்தார் மன்னர்.

எழில் மிகுந்த சிற்பங்களை கண்டும், திருத்தலத்தில் உள்ள பல்வேறு சிறப்புக்கள் எல்லாவற்றையும் தனித்தனியே பார்த்துக் கொண்டும், அழகிய எழில்மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களைக் கண்டு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார் பட்டத்து நாயகி. திருக்கோவிலை வலம் வந்து கொண்டு இருந்த வேளையில் அரசியார் மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தார்.

அவ்விடத்தில் தொண்டர்கள் யாவரும் அமர்ந்து இறைவனுக்கு சாற்றுவதற்காக பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். மன ஓட்டத்தை விடுத்து எண்ணத்தைக் கவரும் வகையிலான அழகிய வண்ண மலர்களைக் கண்டதும் அரசியாருக்கு மகிழ்ச்சி உண்டானது. மேலும் அம்மலர்களில் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்த வாசனையில் சற்று தன் நிலையை மறந்து நின்று கொண்டு இருந்தார். நறுமணத்தில் தன்னையும் மறந்து தன்னையறியாதவாறு மேடையில் இருந்து விழுந்த மலர் ஒன்றை தரையில் கண்டார். அதை கண்டதும் அம்மலர்களை தனது கரத்தில் எடுத்து முகர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்.

மலர்களை தொடுத்துக் கொண்டு இருந்த தொண்டர் கூட்டத்தில் செருத்துணை என்ற அடியார் இருந்து வந்தார். இவர் அடியார்களுக்கு அடியாராக இருந்தாலும் தெரிந்தோ தெரியாமல் எவரேனும் பிழைகள் இழைத்தார்கள் எனில் அவர்களை உடனே கண்டிப்பார் அல்லது அவர்களை தண்டிப்பார்.

அரசியாரின் செயலைக் கண்டதும் இறைவனுக்கு சாற்றுவதற்காக இருந்த மலர்களை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டாள் என்பதைக் கண்டதும் செருத்துணை நாயனாருக்கு மனதிலும், கண்களிலும் கோபக்கணலானது வெளிப்பட துவங்கியது. கோபம் கொண்ட செருத்துணை நாயனார் நாட்டின் அரசியாயிற்றே என்று கூடப் பார்க்காமல் எம்பெருமானின் அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை தான் வைத்திருந்த வாளால் சிவினார் நாயனார்.

செருத்துணை நாயனார் தான் வைத்திருந்த வாளால் சிவியதால் பூமகள் போன்ற பட்டத்தரசி கீழே விழுந்து அழுதாள். பட்டத்தரசியின் அழுகுரல் ஆனது மன்னரின் செவிக்கு எட்டியது. மன்னரும் அழுகுரல் கேட்கும் திசையை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருந்தார். அவ்விடத்தை அடைந்ததும் மன்னர் கண்ட காட்சி அவரை நிலை குலையச் செய்தது. அதாவது தனது பட்டத்தரசி ரத்தம் வெளியேறிய நிலையில் நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் பரிதாப நிலையைக் கண்டார். பட்டத்தரசியின் நிலையை கண்டதும் மன்னருக்கு சினம் வெளிப்பட துவங்கியது.

எவருக்கும் அஞ்சாமல் இக்கொடிய பாவச்செயலை இத்தலத்தில் செய்தது யார்? என்று கண்களிலும், வாக்குகளிலும் தீப்பொறி பறக்கக் கேட்டார். மன்னரின் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் மனதில் பயம் கொண்டவாறு என்ன உரைப்பது என்று அறியாமல் திகைத்து கொண்டு இருந்தனர். அவ்வேளையில் எவருக்கும் பயம் கொள்ளாமல் இச்செயலை புரிந்தது யாமே என்று மிகவும் துணிவுடன் கூறினார். குரல் வந்த திசையை நோக்கி செருத்துணையாரைக் கண்டதும் மன்னரின் சினமானது கறையத் துவங்கியது. அதாவது அடியார் தோற்றம் கொண்ட இவர் இச்செயலை செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாது? என்பதை அறியத் துடித்தது மன்னரின் மனம்.

மன்னரின் முகத்திலும், மனதிலும் எழுந்த குழப்பத்தினை புரிந்து கொண்ட செருத்துணையார், அரசியார் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய மலரை எடுத்து முகர்ந்தமையால் நானே இப்படிச் செய்தேன் என்று கூறினார். அவர் மொழிந்ததை கேட்டு மன்னர் மனம் கலங்கினார். அரசர் செருத்துணையாரை கரங்கூப்பி வணங்கி அடியாரே... தங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறி தனது இடையில் இருந்த உடைவாளை தனது கரங்களினால் பற்றி எடுத்தார். முதலில் மலரை முகர்ந்த மூக்கினை வெட்டாமல் மலரை எடுத்த கரத்தை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று உரைத்ததோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலரை பற்றி எடுத்த கரத்தினை இமைப்பொழுதில் வெட்டினார். மன்னரின் உயர்ந்த பக்தி நிலையை கண்டு செருத்துணை நாயனார் மன்னர்க்குத் தலை வணங்கினார்.

அப்பொழுது அடியார்களிடத்து அன்பு கொண்ட புற்றிடங்கொண்ட பெருமான் மன்னருக்கு அருள் புரியும் பொருட்டு எம்பெருமான் சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். காணக்கிடைக்காத அருங்காட்சியான எம்பெருமானை ரிஷப வாகனத்தில் உமையவளுடன் கண்டதும் அவரை பணிந்து வணங்கி நின்றார். எம்பெருமான் தன் அருள்பார்வையால் பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட இன்னல்களை நீக்கி அருளினார்.

எம்பெருமானோ மன்னனை நோக்கி உமது கடமைகள் யாவற்றையும் முடித்து எம் அடியை வந்தடைவாயாக என்று அருள் புரிந்து அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். மன்னன் எம்பெருமானின் மீது கொண்ட சிவபக்தியையும் அடியார்கள் இடத்து கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் கண்ட அடியார்கள் மன்னரைப் பலவாராக போற்றிப் பணிந்தனர். மன்னரின் கீர்த்தியானது திக்கெட்டும் பரவத் துவங்கியது. மன்னர் கழற்சிங்கனார் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். இறுதியில் எம்பெருமான் திருவருளாலே சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்