Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 041

ஏனாதிநாத நாயனார்..!!

பல வளங்கள் நிரம்ப பெற்ற சோழமண்டலத்தில் இருந்த சிற்றூர்களில் ஒன்று எயினனூர். இவ்வூரில் வாழ்ந்து வந்த பல குலங்களில் ஈழவர் குலத்தில் தோன்றியவர் ஏனாதிநாதர் என்பவராவார்.

இவர் எம்பெருமானை எண்ணாத காலங்களும் இல்லை. நாட்களும் இல்லை. எம்பெருமானின் மீது கொண்ட பக்தியானது எள்ளளவும் குறையாமல் வாழ்ந்து வந்தார். திருநீறு வைத்தவர் எவராயினும் அவர்களை எம்பெருமானாக எண்ணி அவர்களை வழிபடுவார்.

பகைவர்களின் திருமேனியில் எம்பெருமானின் அருள்பெற்ற திருநீறு இருக்கும்பட்சத்தில் அவர்களிடத்தில் இருக்கும் பகைமையையும் மறந்து அவர்களை எம்பெருமானாகவே எண்ணி, அவர்களையும் வழிபடுவார். 

இதனால் ஏனாதிநாதருக்கு பகைவர் இடத்தில் நெறி சார்ந்த அளவிலும், நல்லொழுக்கம் மற்றும் எண்ணங்களினாலும் பகைவரும் போற்றும்படியாக தலைசிறந்து விளங்கினார்.

ஏனாதிநாதரின் முன்னோர்கள் சோழ மன்னரின் படைகளில் ஒரு காலக்கட்டத்தில் சேனாதிபதியாக இருந்தவர்கள். அவர்களின் பரம்பரையின் வழியாகவே வந்தமையால் இவருக்கும் போர்க்கலைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 

மற்றவர்களைக் காட்டிலும் இவர் போர்க்கலை சார்ந்த செயல்பாடுகளில் பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொண்டவராக திகழ்ந்தார். மேலும், இவரை வேறு யாரும் வாள் போட்டியில் வெல்வதற்கு இயலாத சூழலை உருவாக்கக்கூடியவராகவும் விளங்கி வந்தார்.

மேலும் வாள் பயிற்சி தொடர்பான விஷயங்களையும், பலவிதமான நுணுக்கங்களையும் இவர் தம் முன்னோர்களின் மூலம் அறிந்து வைத்திருந்தார். மேலும், தான் கற்ற கலையை தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களும் கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வாழும் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு வாள் பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு பயிற்சி கூடத்தை நடத்திவந்தார்.

ஏனாதிநாதரின் வீரமும், அவர் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சி விதமும் அங்கு பிரசித்தி பெற்றிருந்த காரணத்தினால் அவ்வூரில் இருந்த அனைத்து இளைஞர்களும் இவரிடம் சேர்ந்து வாள் பயிற்சிகளை கற்கத் தொடங்கினார்கள். இப்பயிற்சியை கற்றுக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு எம்பெருமானுக்கும், எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கும், தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதற்காகவும் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை செலவு செய்து கொண்டிருந்தார்.

அனைவருக்கும் கருணை மனதோடு உதவக்கூடிய ஏனாதிநாதருக்கும் அவ்வூரில் பகைவர்கள் இருந்தார்கள். எயினனூரில் ஏனாதிநாதர் வாள் பயிற்சிக்கூடம் நடத்துவதற்கு முன்பாகவே அதிசூரன் என்பவர் பயிற்சிக்கூடம் ஒன்றை அமைத்து நடத்தி கொண்டிருந்தார். அதிசூரன் ஏனாதிநாதரை போன்று நுட்பமான கலைகள் மற்றும் செயல்பாடுகளை அறிந்திடாமல் இருந்தமையால் அவர் ஏனாதிநாதர் ஆரம்பித்த பயிற்சிக்கூடத்தினால் சரிவை சந்திக்க துவங்கினார்.

ஆரம்பக்காலத்தில் அதிசூரனைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அவரிடம் சேர்ந்து கொண்ட மாணவர்களும் பின்னாளில் ஏனாதிநாதரின் பயிற்சிக்கூடத்தை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சென்று பயில துவங்கினார்கள். ஏனாதிநாதரிடம் அதிகமான மாணவர் சேர்க்கையும் அதனால் அவர் பொருளீட்டுவதையும் கண்ட அதிசூரன் மனதில் பொறாமை கொள்ள துவங்கினான். நாளடைவில் அதிசூரனிடம் ஒருசில மாணவர்கள் பயிற்சி பெறுவது பெரும் சவாலாக இருந்தது. மாணவர்கள் இல்லாமல் பயிற்சி பள்ளியை நிறுவி நடத்தி கொண்டிருக்கின்ற அதிசூரனுக்கோ ஊர் மக்களின் மத்தியில் செல்வாக்கு குறைய துவங்கியது.

அதிசூரன் மனதில் கொண்டிருந்த பொறாமையானது நாளடைவில் அவர் மீது மிகுந்த பகைமை உணர்வாக உருவாக துவங்கியது. அந்த பகைமை உணர்வு அவரிடம் தீயகுணங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தீயகுணங்கள் நிரம்ப பெற்ற ஒரு மனிதராகவும் மாற்றியது. இனியும் பொருத்தல் ஆகாது என்று தீயகுணங்கள் யாவும் நிரம்ப பெற்ற அதிசூரன் தன்னுடைய தொழில் உரிமையை காப்பாற்றி எவ்விதத்திலாவது ஏனாதிநாதரை பழி தீர்த்தே தீருவேன் என்று சபதம் மேற்கொண்டார். தான் மேற்கொண்ட சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு தனக்கு ஆதரவாக செயல்படக்கூடிய தனது சுற்றத்தாரையும், சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு ஏனாதிநாதர் இருக்கக்கூடிய இருப்பிடத்திற்கு சென்றார்.

ஏனாதிநாதரை கண்ட அதிசூரன் அவரை நோக்கி ஒரு ஊரில் இரு வாள் பயிற்சிக்கூடம் செயல்படுவதனால் யாருக்கு என்ன பயன்? இருப்பினும் பயிற்சிக்கூடங்களில் இருவேறு ஆசிரியர்கள் எதற்கு? வாள் பயிற்சியில் சிறந்தவர் எவரோ அவரே இவ்வூரில் தனித்து இருந்து பயிற்சிக்கூடம் நடத்துவோம். திறமையும், தகுதியும் எவரிடத்தில் இருக்கின்றதோ அவர்களே மேற்கொண்டு பயிற்சி பள்ளிகளை நடத்த தகுதி உடையவர்கள். உமக்கு துணிவிருந்தால் எம்முடன் போர்புரிய வருவாயாக... என்று ஏனாதிநாதரிடம் சவால்விட்டார் அதிசூரன். ஏனாதிநாதரோ சரி... யாம் உம்முடன் போர்புரிய வருகின்றோம். போர்புரியும் இடத்தினையும் நீரே முடிவு செய்வாயாக... என்று கூறினார்.

அதிசூரன் அனைத்திற்கும் தயாராக வந்தது போன்று ஏனாதிநாதரை நோக்கி, நகரின் வெளியிடத்தில் இருவருடைய படைகளும் போர் செய்வதற்கு தகுந்த இடமாக இருக்கும் என்றார். மேலும் உமது படைகளும், எமது படைகளும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவருக்கொருவர் அவர்களுக்கு உண்டான திறமையை வெளிப்படுத்தும் என்று கூறினார். அதிசூரன் கூறிய விதத்தை அறிந்ததும் இதுவே உமக்கு உரியது என்று எண்ணினால் யாமும் இதற்கு இசைகின்றேன் என்றார் நாயனார். இருவர் பக்கமும் படைவீரர்கள் அணிவகுத்து சேர துவங்கினார்கள்.

போர் புரிவதற்கான நாளும் வரவே நகரின் வெளிப்புறத்தில் இருவரின் படைகளும் போர் செய்வதற்கு தகுந்தாற்போல் அனைத்து வகையான ஏற்பாடுகளுடன் போருக்கு தயார் நிலையில் இருந்தன. அதிசூரன் மனதில் ஏனாதிநாதரை பழி தீர்த்தே ஆக வேண்டும் என்ற பகைமை உணர்வு மட்டுமே இருந்தது. இரு படைகளுக்கும் இடையே போரும் ஆரம்பிக்க துவங்கியது. அணிவகுத்து நின்ற இரு படைகளும் ஒருவருக்கொருவர் தத்தமது உயிர்களை துட்சமாக எண்ணி முழுவீச்சுடன் போர்புரியத் துவங்கினார்கள்.

போர்க்களத்தில் வாள் பிடித்த கரங்களும், வேல் பிடித்த கரங்களும், வில் பிடித்த கரங்களும் அறுபட்டு விழுந்தன. வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரிந்த வீரர்களின் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன. உடல் பாகங்கள் புண்பட்டு இரத்தம் சிந்தின. வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போரில் வெளிவந்த குடல்களில் உடல்கள் பின்னிப்பிணைந்தன.

அதிசூரனின் படை முழுவதுமாக தோற்கடிக்கப்பட்டது. போரில் அகப்பட்ட வீரர்கள் யாவரும் கொலை செய்யப்பட்டனர். போர்க்களத்தில் போர்புரிந்து உயிர் பிழைத்தோர் போர்க்களத்தை விட்டு ஓடினார்கள். ஏனாதிநாதரின் திறமை, வீரத்திற்கு முன்னால் அதிசூரன் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான். வெற்றிவாகை சூடி திரும்பினார் ஏனாதிநாதர்.

காலம் கடந்து சென்றன. போரில் தோற்ற அதிசூரன் மனதில் பகைமை உணர்வானது வளர்ந்து கொண்டே இருந்தது. அந்த பகைமை உணர்வானது அவரை நேரான பாதையை விடுத்து செல்ல வைத்தது. அதாவது, ஏனாதிநாதரை நேரடியாக போரில் வெற்றி கொள்ள முடியாது. அவரை சூழ்ச்சி செய்தே வெற்றி கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அந்த காலத்திற்காக காத்துக் கொண்டு இருந்தான். அதற்கான வாய்ப்புகளும் ஏற்பட துவங்கியது.

தன் மனதில் எழுகின்ற கோபத்தினால் உருவான வஞ்சக எண்ணத்தினால் தம் முன்னால் நிற்பவரின் அருமைகளை அறிந்து கொள்ள இயலாத அதிசூரன் தனக்கு கிடைக்கப்போகும் வாய்ப்பினை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தார். அந்த வாய்ப்பில் தனது சூழ்ச்சிகளையும் புகுத்தி எந்த வகையிலும் வெற்றியை தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக செயல்படத் துவங்கினார். அதற்காக தமது முதற்கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கத் தொடங்கினார்.

அதாவது, தன்னிடம் இருந்த ஒரு ஏவலாளி மூலம் ஏனாதிநாதரை சந்திக்க வைத்து நாம் இருவர் மட்டும் தனித்து போரிடுவோம். மேலும் தேவையில்லாமல் இருபடையினை அழைத்து வந்து இரு படைகளுக்கும் இடையே போர்புரிவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இயலும். இதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே தொடர்ந்து வாள் பயிற்சியளிக்கும் கூடத்தினை நிர்வகிக்கப்படுவார் என்ற முடிவோடு செயல்படுவோம் என்று தனது திட்டத்தின் முதல் பகுதியை தனது ஏவலாளன் மூலம் ஏனாதிநாதரிடம் தெரிவித்தார். ஏனாதிநாதரும் அதிசூரன் அனுப்பிய ஏவலாளன் மூலம் கிடைத்த தகவலுக்கு சரி என்று கூறினார்.

அதன் பிறகு அதிசூரன் சண்டையிடுவதற்கான நாள் மற்றும் நேரத்தை கணித்தும், தனக்கு சாதகமாக இருக்கக்கூடிய இடத்தினையும் தேர்வு செய்து ஏனாதிநாதருக்கு தனது ஏவலாளன் மூலம் செய்தி அனுப்பினான். மனதில் எவ்விதமான கலங்கமும் இல்லாத ஏனாதிநாதர் அதற்கும் சம்மதம் அளித்தார். அவர்கள் சண்டையிடுவதற்கு குறித்த நாளும் வந்தது. அதிசூரன் தனது வஞ்சக எண்ணத்தால் எவ்விதத்திலாவது ஏனாதிநாதரை பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தமது சூழ்ச்சி வலைகளை செய்ய துவங்கினார்.

சண்டைக்கு புறப்பட்டு செல்லும் முன்பாக தம் நெற்றியிலும், உடல் முழுவதும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். சண்டையிடுவதற்கு தேவையான வாளும், கேடயமும் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது திருநீறு பூசிய நெற்றியும், உடம்பும் ஏனாதிநாதருக்கு தெரியாதவாறு கவசத்தாலும், கேடயத்தாலும் மறைத்துக் கொண்டார். பின்பு தான் சண்டையிடுவதற்கு குறித்த இடத்திற்கு சென்று ஏனாதிநாதரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார்.

அதிசூரன் குறித்த நேரத்திற்கு அவ்விடத்திற்கு வந்த ஏனாதிநாதர் முன்னால் அதிசூரன் கேடயத்தால் தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே சென்றார். இருவரும் தம்மிடம் இருந்த போர் ஆயுதங்களை கொண்டு போர்புரியத் தொடங்கினார்கள். சண்டையில் ஏனாதிநாதருடைய தாக்கல் மிகவும் வலிமையாக இருந்தது. ஆயினும் அந்த தாக்குதலில் இருந்து பதுங்கி அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கியும், நின்றும் சண்டை புரிந்தார் அதிசூரன்.

ஏனாதிநாதரின் கரங்களில் சுழன்று கொண்டிருந்த வாள் அதிசூரனின் உடலைக் கிழித்து அதிசூரனை கொல்ல வருகின்ற தருணத்தில் அதிசூரன் தனது உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும், கேடயத்தையும் விலக்கினார். திருநீறு அணிந்து இருந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்து கணப்பொழுதில் திடுக்கிட்டு நின்றார் ஏனாதிநாதர். ஏனாதிநாதரின் கரங்களில் இருந்துவந்த வாளின் பிடிப்பும் தளர துவங்கியது. போர்க்கலையில் சிறந்து விளங்கிய ஏனாதிநாதரின் வீரமானது எம்பெருமானின் மீது கொண்ட பக்திக்கு அடிமையாகத் துவங்கியது.

என்ன பிழை இழைத்துள்ளேன்... எதிரி என்று போர்புரிய வந்தேனே.... சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். முன் ஒரு பொழுதும் இவர் நெற்றியில் காணாத விபூதியை இன்றைக்கு கண்டேன். இனி வேறென்ன எண்ணுவதற்கு... இவர் பரமசிவனுக்கு அடியவர்... ஆகையால் இவருடைய உள்ளக்குறிப்பின் வழியே நிற்பேன் என்று கூறினார். இவரோடு இனியும் போரிடுவது என்பது முறையற்ற செயல் ஆகும் என்பதை உணர்ந்தார். இவ்வளவு காலமும் உண்மையை உணராமல் நான் பெரிய பிழையை இழைத்துள்ளேன் எம்மை பொறுத்தருள வேண்டும் என எண்ணினார்.

பின்பு தம் கரங்களில் இருந்த கேடயத்தையும் கீழே போட எண்ணினார். அவ்வேளையில் ஆயுதங்களைக் கீழே போடுவது என்பது அவரை அவமதிப்பது போல் ஆகும் என்று எண்ணினார். நிராயுதபாணியைக் கொன்றார் என்ற பழி ஏற்பட்டு விடும் என எண்ணினார். இந்த எண்ணம் அவரிடம் தோன்ற இறுதிவரை ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பதுபோல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும், கேடயத்தையும் தாங்கி எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்ய துவங்கினார் ஏனாதிநாதர்.

ஏனாதிநாதரின் எண்ணத்தை புரிந்து கொண்ட அதிசூரன் தன் மனதில் இருந்த எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள துவங்கினான். அதாவது, தனது கரத்தில் இருந்த வாளினை கொண்டு ஏனாதிநாதரை கொன்றுவிட்டான். பின், அதிசூரனும் அவ்விடத்தை விட்டு ஓடி ஒளிந்தான். ஏனாதிநாதர் இறந்ததும் அவருடைய உடலில் இருந்து ஆவி பிரிந்தது. அவ்வேளையில் ஆகாயத்தில் பேரொளி ஒன்று தோன்ற துவங்கியது. அவ்வொளியின் மத்தியில் எம்பெருமான் உமையாளுடன் விடையின் மேல் எழுந்தருளினார். ஏனாதிநாதரை உயிர்பெற்று எழச்செய்தார்.

உயிர்பெற்று நிலமதில் வீழ்ந்து எம்பெருமானையும், தாயையும் வணங்கி நின்றார். எம்பெருமான் ஏனாதிநாதரை நோக்கி இவ்வுலக வாழ்க்கையை மகிழ்வுடன் வாழ்ந்து பின்பு நீ எவ்வேளையிலும் எம்மை விட்டுப் பிரியாமல் தம்முடைய திருவடியிலேயே இணைந்து பெருவாழ்வினை பெறுவாயாக... என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். பின்பு ஏனாதிநாதர், வெண்ணீறு அணிந்த அடியார்களுக்கும், அன்பர்களுக்கும் தம்மால் முடிந்தளவு வேண்டுவனவற்றை செய்து இவ்வுலக வாழ்க்கையை விட்டு எம்பெருமானின் திருவடி சேர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக