திங்கள், 29 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 051

பெருமிழலைக் குறும்ப நாயனார்...!

மிழலைநாட்டில் உள்ள வளம் நிறைந்த ஊர்தான் பெருமிழலை. குறும்பர் மரபில் அவதரித்த பெருமிழலைக் குறும்பனார் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் வளரும் பருவத்தில் கடவுளிடத்தும், அடியார்களிடத்தும் இடையுறாத அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். எம்பெருமானின் திருவடிகளை மனதில் நிறுத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை மனதில் நிறுத்தி எந்த வேளையிலும் போற்றி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்.

சிவனடி‌யார்களின் முன்னிலையில் தம்மை சிறிய எளியோனா‌கவே கருதி கொள்வார். அடியார்களை தம் இல்லத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்வதோடு மட்டுமின்றி அவர்களின் விருப்பம் மற்றும் ஏவல்களை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பிய பணியை மனநிறைவோடு செய்து கொண்டு இருந்தார். இதனாலேயே இவ்வடியாரது இல்லத்தில் எப்பெ‌hழுதும் சிவனடியார்கள் வந்து சென்ற வண்ணமாகவே இருப்பார்கள்.

அவ்விதமாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்வில் ஒரு சிவனடியாரை பற்றி கேள்விப்பட்டதும் மாற்றம் ஏற்படத் துவங்கியது. அதாவது சிவபக்தியிலும், சிவனடியார் பக்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்களின் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகையை பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரின் பெருமையைக் கேள்வியுற்றார். அது முதல் சுந்தரமூர்த்தி நாயனாரின் மீது ஒருவிதமான அன்பும், ஈர்ப்பும் ஏற்படத் துவங்கியது. நாளடைவில் எம்பெருமானின் திருநாமத்தினை போற்றி வந்த‌தோடு மட்டுமல்லாமல் சுந்தரரின் செயல்களையும், அவருடைய கீர்த்திகளையும் பற்றி அனைவரிடத்திலும் உரையாடி மகிழ்ந்த வண்ணமாக இருந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை சிந்தித்து, துதித்து, வணங்கி வந்து கொண்டிருந்தார். நாளடைவில் சுந்தரமூர்த்தி நாயனாரை அடிவணங்கி போற்றுதலால் எம்பெருமானின் அருளையே பெறலாம் என்ற உறுதி கொண்டார் பெருமிழலைக் குறும்பனார். அன்பினால் எம்பெருமானையும், சுந்தரமூர்த்தி நாயனாரையும் பல காலம் மனதால் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தார்.

பெருமிழலைக் குறும்ப நாயனார் மேற்கொண்ட உபாசனையின் சக்தியாலும், எம்பெருமானின் திருவருளாலும் குறும்பனாருக்கு அஷ்டமாசித்திகளும் (அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம் மற்றும் வசித்துவம் என்னும் எட்டு சித்திகள் கொண்டது) கைவரப்பெற்றார். தம்முடைய சித்தத்தால் அமர்ந்த இடத்தில் இருந்து பலவற்றையும் அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றார். தமக்கு கிடைத்த இந்த அரிய வரத்தினால் சுந்தரமூர்த்தி சுவாமிகளை தம்முடைய சித்தத்தால் கண்டு களித்து பெருமகிழ்ச்சி கொண்டார்.

இவ்விதமாக நிகழ்ந்து கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் மீண்டும் ஒரு எதிர்பாராத செயல் நடைபெற உள்ளது என்பதை தம்முடைய சித்தத்தால் அறிந்து கொண்டார். திருவஞ்சைக்களத்திற்கு சென்று திருப்பதிகம்பாடும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பரமசிவனுடைய திருவருளினால் உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதை தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து கொண்டார்.

இதை அறிந்ததும் மிகவும் மன வேதனை கொண்டார் குறும்ப நாயனார். ஏனெனில் இனி வரும் நாட்களில் சுந்தரமூர்த்தி நாயனாரை காண இயலாததை உணர்ந்து கொண்டதும் திருநாவலூரில் திருக்கயிலை எய்த நான் அவரைப் பிரிந்து

கண்ணிற் கரியமணி கழிய வாழ்வார் போல வாழேன்என்று எண்ணி

'இன்றே யோகத்தால் சிவன் தாள் சென்றடைவேன்" என்று சொல்லி,

நாற்கரணங்களாலும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு,

பிரமநாடிகளின் வழியே கருத்தை செலுத்த,

யோக முயற்சிகளினாலே பிரமரந்திரம் திறப்ப,

உடலின்றும் பிரிந்து சுந்தரர் கயிலை செல்வதற்கு முதல் நாளே தம் உயிரை, ச‌டலத்தை விட்டு நீங்கும் வண்ணம் செய்தார். பின் திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நிழலை அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்