Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள் மாதவிடாய் நாளில் என்ன பயன்படுத்தலாம், அம்மாக்களும் தெரிஞ்சுக்கணும்!

பெண் பிள்ளைகள் சிறு வயதில் பூப்படைவது அதிகரித்துவிட்டது. இதனோடு அம்மாக்களுக்கு உண்டாகும் கவலை மாதவிடாய் நாளை அவர்களுக்கு அசெளகரியமில்லாமல் கடக்க உதவ வேண்டும் என்பது.

பெண் பிள்ளைகள் பூப்படைவது மகிழ்ச்சியை உண்டு செய்தாலும் அவர்களை சீரான மாதவிடாய் எதிர்கொள்ள தயார் செய்வது அம்மாக்களுக்கு எப்போதுமே சிரமமான ஒன்றுதான்.
விவரம் தெரிந்த வயதில் பூப்படையும் பெண் பிள்ளைகளை பொறுத்தவரை பிரச்சனை இல்லை. ஆனால் மிகச்சிறு வயதில் விவரம் அறியா வயதில் பூப்படையும் பிள்ளைகள் மாதவிடாயை சந்திக்கும் போதெல்லாம் அதிகப்படியான மன குழப்பத்துக்கு உள்ளாவார்கள்.

இரண்டு கெட்டான் வயதில் பூப்படையும் இப்பிள்ளைகளுக்கு நாப்கின் பயன்பாடு அசெளகரியத்தை உண்டாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவர்களுக்கு மாதவிடாய் செளகரியமாக இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.



இளவயதில் பூப்படைவது

பெண் பிள்ளைகள் பூப்படையும் வயது 12 வயது முதல் 16 வயது வரையாகத்தான் இருந்தது. சமீப வருடங்களாக 8 வயது நிரம்பாத பிள்ளைகளும் பூப்படைவது அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறையும் உணவு பழக்கங்களும் பூப்படைதலை விரைவாக ஊக்குவித்தாலும் இதனால் மன ரீதியாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
 
உடல் ரீதியிலான மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் மனதளவில் அதிக குழப்பங்களை சந்திக்கிறார்கள் காரணம் விவரம் புரியும் பக்குவமான வயதை அவர்கள் பெறாமல் இருப்பதே. இந்நிலையில் மாதவிடாய் சுழற்சி அவர்களது குழப்பத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது என்று தான் சொல்லவேண்டும். இந்த மாதவிடாயின் போது உண்டாகும் உதிரபோக்கை எளிதாக கடந்துவர என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். 

மாதவிடாய் சுழற்சி

பெண் பிள்ளைகள் பூப்படைந்த உடன் மாதவிடாய் சுழற்சி சீராக வருவதில்லை. இது பயப்படக்கூடிய விஷயமும் அல்ல. சிலருக்கு ஒரு வருடம் வரை மாதவிடாய் உதிரபோக்கு வராமல் இருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு இரண்டு வருடம் வரை மாதவிடாய் சுழற்சி வராமல் இருக்கும்.. ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் உடல் வாகை பொறுத்து இந்த மாற்றங்கள் உண்டாகும்.

சில பெண் பிள்ளைகளுக்கு உடலில் கர்ப்பப்பை வளர்ச்சி, ஹார்மோன் சுரப்பு சீராகி மாதவிடாய் சுழற்சி பூப்படைந்த அடுத்த மாதத்திலிருந்து வருவதும் உண்டு. இத்தகைய குழந்தைகளுக்கு தான் மாதவிடாய் சுழற்சியின் போது உதிரபோக்கை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இந்த நிலையில் அவர்களை சரியாக வழிநடத்துவது அம்மாக்களின் கையில் தான் உண்டு. இது குறித்து பார்க்கலாம். 

உதிரபோக்கு நேரத்தில்

பெண் குழந்தைகளுக்கு பெண் உறுப்பு சுத்தம் குறித்த விழிப்புணர்வே குறைவாக இருக்கும் நேரத்தில் பெண் உறுப்பிலிருந்து வெளிப்படும் உதிரபோக்கு சுத்தம் செய்வதும் சுகாதாரமாக வைத்திருக்கும் முறை குறித்தும் கற்றுத்தருவது சவாலான விஷயம் தான். இந்நிலையில் பழங்கால முறையை கடைபிடித்தால் சுகாதாரமாக இருப்பதோடு அசெளகரியமான உணர்வையும் பெண் பிள்ளைகள் உணர மாட்டார்கள்.

தற்போது உதிரபோக்கு நேரத்தில் பயன்படுத்தும் நாப்கின், மென்சுரல் கப், டேம்பன்ஸ் போன்றவை எல்லாமே பெண் குழந்தைகளுக்கு சரியான தீர்வாக இருக்காது. இந்த நிலையில் சுத்தமான பருத்தி துணியை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் பெண் பிள்ளைகள் செளகரியமாகவும் சுகாதாரமாகவும் உணரமுடியும். 

எப்படி பயன்படுத்துவது

கடைகளில் கிடைக்கும் தரமான பருத்தி துணியை 5 மீட்டர் அளவு வாங்கி கொள்ளவும். அதை சிறிய கைக்குட்டை போன்று கத்தரித்து ஒன்றின் மீது ஒன்றாக வைத்து தைக்க வேண்டும். மீண்டும் இதை நான்காக மடித்து தைக்க வேண்டும். மிஷின் அல்லது கைகளிலும் தைத்து கொள்ளலாம். இது போன்று பத்து துணிகள் வரை தயாரித்து வைத்து கொள்ள வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் வரும் நேரத்தில் உள்ளாடையில் நடுவில் இந்த துணியை நான்காக மடித்து நன்றாக உள்ளே வைக்க கற்றுத்தர வேண்டும். இவை நகராமல் இருக்கும் அளவுக்கு கனமாக நான்காக மடித்து வைக்க வேண்டும்.

ஆரம்ப நிலையில் சிரமமாக இருந்தாலும் போக போக பழகிவிடும். இவை நாப்கின் போன்று இல்லாமல் கூடுதலாக மற்றொரு உள்ளாடை அணிந்த உணர்வை ஆனால் மென்மையாகவே இருக்கும். அதிக உதிரபோக்கு ஏற்படுபவர்கள் மட்டும் இரண்டு துணியை நான்காக மடித்து வைக்க வேண்டும். இவை நகராது என்பதால் அசெளகரியமும் உண்டாகாது. 

சுத்தம் செய்யும் முறை

இதை சுத்தம் செய்வதும் எளிதானது. ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் ஒருமுறை இந்த துணியை மாற்ற வேண்டும். உள்ளாடையில் வைத்திருக்கும் துணியை குழாயின் கீழ் விரித்து அலச கற்றுத்தர வேண்டும்.இறுதியாக வெந்நீர் விட்டு அலசி எடுத்து வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பிறகு அதை மூங்கில் கூடையில் வேப்பிலை இலையை போட்டு அதில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் கிருமிகள் தங்காமல் வெளியேற்றப்படும். சிறு பெண் குழந்தைகள் எளிதாக இதை சுத்தம் செய்வார்கள் என்பதால் அம்மாக்கள் இது குறித்த கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
 
அசெளகரியம் இல்லாமல் செளகரியமாக இருப்பதோடு சருமத்தையும் பதம் பார்க்காது. பயன்படுத்தவும், சுத்தம் செய்யவும் எளிமையாகவே இருக்கும்.
குறிப்பு இதை பயன்படுத்தும் போது சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடலாம் என்பதை தவிர, மற்ற அசெளகரியங்களை உண்டாக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக