ஒரு முறை சார்ஜ் பண்ணா 1,000 கிமீ தூரம் போகக் கூடிய மின்சார காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் எனும் பெயரில் அந்த காரை களமிறக்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
இந்த காரின் டீசர் புகைப்படத்தையே தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கின்றது. ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு சொகுசு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பென்ஸ் இக்யூ (EQ) எனும் துணை பிராண்டின் வாயிலாக மின் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
தற்போது இந்த துணை பிராண்டை விரிவாக்கும் முயற்சியில் பென்ஸ் களமிறங்கியுள்ளது. இதனடிப்படையிலேயே புதிய இக்யூஎக்ஸ்எக்ஸ் மின்சார காரின் உற்பத்தியை பென்ஸ் மேற்கொள்ள இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழுமையான சார்ஜில் 620 மைல் தூரம் செல்லும் என்ற ஆச்சரிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒரு முறை முழுசா சார்ஜ் பண்ணா சராசரியாக 997 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். இது தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார வாகனங்களைக் காட்டிலும் மிக அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். டெஸ்லா போன்ற முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பென்ஸ் அறிவிப்பை அடுத்து வியந்து நிற்க தொடங்கியுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் கான்செப்ட் காரை உருவாக்கும் பணியினை நிறுவனத்தின் ஃபார்முலா 1 குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால், இதன் கான்செப்ட் மாடலின் அறிமுகம் அடுத்த வருடம் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், ஃபார்முலா 1 குழுவினர் இந்த காரை உருவாக்குவதனால் சிறந்த டைனோமிக்ஸ் தோற்றத்தில் இக்யூஎக்ஸ்எக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் டீசர் படம் அமைந்திருக்கின்றது.
காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் உருவதோற்றம் வழங்கப்பட்டிருப்பதால் ரேஞ்ஜ் மற்றும் திறன் வெளிப்பாட்டில் இந்த கார் மிக சிறந்த தயாரிப்பாக இருக்கும் என நம்பப்படுகின்றது. தற்போது காரின் டீசர் படங்கள் மற்றும் ரேஞ்ஜ் திறன் பற்றிய தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
ஆகையால், மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎக்ஸ்எக்ஸ் மின்சார காரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. அதேசமயம், இந்த காரை பென்ஸ் நிறுவனம் வெறும் கான்செப்ட் மாடலாக மாட்டுமே உருவாக்கும், விற்பனைக்கான உற்பத்தியை மேற்கொள்ளாது என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.
இந்த தகவல் மின்சார வாகன ஆர்வலர்கள் மற்றும் பென்ஸ் சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் துக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் மற்றுமொரு ஆறுதலாக இந்த வாகனத்திற்கு பதிலாக வேறொரு புதிய சிறப்பு தொழில்நுட்ப வாகனத்தை இக்யூ துணை பிராண்ட் வாயிலாக நிறுவனம் களமிறக்கலாம் என கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக