சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலமானவர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் வருமானம் பெற்று வருகிறது ஒரு கும்பல்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்து செய்திகளும் மக்களிடத்தில் அடுத்த நொடியில் எடுத்து செல்ல முக்கிய பாலமாக இருப்பது சமூக வலைதளங்கள். அரசியல் தலைவர்கள் பதவி ஏற்பது, ராஜினாமா செய்வது, சினிமா, விளையாட்டு எனத்தொடங்கி எதுவாக இருந்தாலும் சரி அனைத்துமே சமூக வலைதளங்களில் தான் நடக்கிறது. அதில் முக்கிய தளமாக இருப்பது டிவிட்டர். குறிப்பாக சினிமா துறையில் டிவிட்டர் முக்கிய பங்காற்றுகிறது.
ஒரு படம் வெளிவந்து மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுவிட்டால், அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி அவர்களை போலவே பதிவுகளையும் செய்ய தொடங்குகின்றனர். மக்களும் அந்த நடிகர் தான் என்று எண்ணி பாலோ செய்ய தொடங்குகின்றனர். சில சமயங்களில் பெரிய நடிகர்களுமே இந்த மாதிரியான போலி கணக்குகளை பாலோ செய்து விடுகின்றனர். இதனால் அந்த கணக்குகளின் பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகமாகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாலோவர்ஸ் வந்தவுடன் அந்த கணக்கை விற்றுவிடுகின்றனர்.
உதாரணத்திற்கு 10,000 பாலோவர்ஸ் உள்ள டிவிட்டர் கணக்கு ரூ. 4000 முதல் ரூ. 6000 வரைக்கும் விற்பனை ஆகிறது. பின்பு அந்த கணக்குகளின் பெயர்களை மாற்றி புதிய படங்களின் புரமோசன்களுக்கு உபயோகித்து வருமானம் ஈட்டுகின்றனர். லட்ச கணக்கில் பாலோவர்ஸ் உள்ள கணக்குகள் பல ஆயிரங்களுக்கு விற்கப்படுகிறது.
சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா திரைப்படத்தில் ரங்கள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி மக்களிடையே நல்ல பாராட்டை பெற்றார். உடனே அவரது பெயரிலும் போலி கணக்கு தொடங்கப்பட்டது. சார்பட்டா படத்தை பற்றி பாராட்டி டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வான உதயநிதி ஸ்டாலின். அதில் தவறுதலாக பசுபதியின் பெயரில் இருந்த போலி கணக்கை டேக் செய்து விட்டார். உதயநிதியின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து பசுபதியின் கணக்கை டேக் செய்ததால் உண்மையானதாக இருக்கும் எண்ணி அனைவரும் பாலோ செய்ய தொடங்கினர். இதனால் சில மணி நேரங்களில் அந்த போலி கணக்கின் பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகமானது. உடனடியாக அந்த கணக்கு ஒரு நடிகையின் பெயரில் மாற்றப்பட்டது. இதே போல் பல சம்பவங்கள் டிவிட்டரில் நடந்து கொண்டிருக்கிறது.
வலிமை பட இயக்குனர் வினோத், ஜார்ஜ் மரியான், வடிவேலு என பல பிரபலங்களின் பெயர்களின் போலி கணக்குகள் உலா வருகின்றன. இது போலி கணக்கா அல்லது உண்மையா என்று ஆராய்ந்து பிறகு, பின்தொடர வேண்டும். சமீபத்தில் பேஸ்புக்கில் பிரபலமானவர்களின் பெயர்களில் கணக்குகள் தொடங்கி அனைவரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே போலி கணக்கு குறித்து எச்சரிக்கையாக இருப்பது மிக முக்கியமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக