இந்த கோயில் எங்கு உள்ளது?
திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் மலை என்னும் ஊரில் அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ தொலைவில் உய்யக்கொண்டான் திருமலை உள்ளது. கோயில் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர், அஞ்சனாட்சி அம்பாள் இருவரும் மேற்கு நோக்கியுள்ளனர். இவர்களது சன்னதிக்கு நடுவே கிழக்கு நோக்கி பாலாம்பிகை இருக்கிறாள். இக்கோயில் 50 அடி உயர மலையில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது.
மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதாக வரம் கொடுத்ததால் சிவனுக்கு, 'உயிர்கொண்டார்" என்ற பெயர் ஏற்பட்டது. இவரே ஜீவன்களுக்கு ஆதாரமாக இருப்பதால் உஜ்ஜீவநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் 'கற்பகநாதர்" என்றும் இவருக்கு பெயர் உண்டு.
இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. லட்சுமியின் சகோதரி இவள்.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 67வது தேவாரத்தலம் ஆகும்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து சிவனை 'திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு..!!" என வேண்டிப் பாடியுள்ளார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
பங்குனியில் பிரம்மோற்சவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்றவை கொண்டாடப்படுகின்றன.
தை மாதத்தில் ஓர்நாள் மாலையில் சிவலிங்கம், அஞ்சனாட்சி அம்பிகை மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒருமுறை என, வருடத்தில் 4 முறை இங்கு சூரிய பூஜை நடக்கும்.
வைகாசி விசாகத்தன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி புறப்பாடும் உண்டு. கந்தசஷ்டியின்போது தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன், ஊருக்குள் சென்று ஐந்து கோயில் சுவாமிகளை சந்திக்கும் வைபவம் நடக்கும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் (ஒரு வகையான தோஷம்) நீங்க பாலாம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரயாணங்களின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
ஜேஷ்டாதேவிக்கு புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக