Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 ஏப்ரல், 2022

பக்கத்துலயே இருக்கும்... ஆனா எதிரிகளின் கண்ணுல மாட்டாது... நீர்மூழ்கி கப்பல்களில் கையாளப்படும் தந்திரம்!

நீர்மூழ்கி கப்பல்களில் கையாளப்படும் ஒரு தந்திரம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீர்மூழ்கி கப்பல்களை (Submarines) பார்த்துள்ளீர்களா? நம்மில் நிறைய பேருக்கு நீர்மூழ்கி கப்பல்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். இன்னும் சிலருக்கோ, நீர்மூழ்கி கப்பல்களை புகைப்படங்களில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்கள் நீர்மூழ்கி கப்பல்களை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் நீர்மூழ்கி கப்பல்களை எந்த வகையில் பார்த்திருந்தாலும் சரி, ஒரு பொதுவான விஷயத்தை கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் இருப்பதுதான் அந்த பொதுவான விஷயம். ஆம், பெரும்பாலும் அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் கருப்பு நிறத்தில்தான் இருக்கும். வேறு வண்ணத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வண்ணம் பூசும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இதற்கும், நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளின் கண்களில் சிக்காமல் இருப்பதற்கும் முக்கிய தொடர்பு உள்ளது. அணு சக்தி கண்டறியப்படுவதற்கு முன்னதாக நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கு அடியில் இருப்பதை காட்டிலும், பெரும்பாலும் நிலத்தில்தான் இருக்கும்.

எனவே எதிரிகளிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை காப்பாற்றுவதற்கு உருமறைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. முதலாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில், தங்களது நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளின் கண்களுக்கு எளிதில் புலப்படாத வகையில் பாதுகாப்பதற்கு, எந்த நிறம் பொருத்தமானதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க அமெரிக்கா சோதனைகளை நடத்தியது.

அப்போது நீர்மூழ்கி கப்பல்களின் ஹல் (Hull) எனக்கூறப்படும் உடற்பகுதியை சாம்பல் நிறத்திலும், டெக்குகள் (Decks) எனப்படும் அடுக்குகளை கருப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. நீர்மூழ்கி கப்பல்களை இந்த நிறங்களில் பெயிண்ட் செய்தால், எதிரிகளின் கண்களிடம் இருந்து மிகச்சிறப்பான பாதுகாப்பு கிடைக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

இதன்பின் நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால் 1930களின் மைய பகுதியில் ஒரு பிரச்னை தெரியவந்தது. இந்த வகையில் வர்ணம் பூசப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், நீருக்கு அடியில் ஆழமாக செல்லாவிட்டால், மேலே பறக்கும் விமானங்கள் மூலமாக எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான் அந்த பிரச்னை.

எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிப்பதற்காக பேர்ல் துறைமுகத்தில் (Pearl Harbour) அமெரிக்கா மீண்டும் பல்வேறு சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக, நீர்மூழ்கி கப்பல்கள் பல்வேறு வண்ணங்களில் பெயிண்ட் செய்யப்பட்டன. இறுதியில் அடர் நீல நிறம்தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்டது.

நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கும்போதும், இந்த நிறம் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இப்படி ஒரு முடிவு கிடைத்ததை தொடர்ந்து, கமாண்டர் தனது டிவிஷனில் உள்ள அனைத்து நீர்மூழ்கி கப்பல்களையும், அடர் நீல நிறத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில், அனைத்து நீர்மூழ்கி கப்பல்களும் அடர் நீல நிறத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் அதன்பின் புதிய பிரச்னை ஒன்று எழுந்தது. இந்த அடர் நீல நிறம் எளிதில் மங்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக நீரில் மூழ்கி இருக்கும்போது, நீர்மூழ்கி கப்பல்களை எதிரிகள் எளிதில் கண்டறியும் சூழல் உருவானது.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து இறுதியாகதான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக கருப்பு முடிவு செய்யப்பட்டது. வேறு எந்த நிறத்தை காட்டிலும் கருப்பு நிறத்தை நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக தேர்வு செய்ததற்கு பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. கருப்பு நிறத்தின் உருமறைப்பு திறன் முதல் காரணம்.

எதிரிகளின் கண்களுக்கு கருப்பு நிறம் எளிதில் சிக்காது. கருப்பு நிறம் நீடித்து உழைக்கும் என்பது இரண்டாவது காரணம். அடர் நீல நிறம் எளிதில் மங்கி, எதிரிகளின் கண்களுக்கு நீர்மூழ்கி கப்பல்களை எளிதில் புலப்பட செய்தது என ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? ஆனால் கருப்பு நிறம் எளிதில் மங்காமல் நீடித்து உழைக்கும்

இதன் காரணமாகவே நீர்மூழ்கி கப்பல்களை பெரும்பாலும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யும் வழக்கத்தை அனைவரும் பின்பற்ற தொடங்கினர். நீர்மூழ்கி கப்பல்களின் கருப்பு நிறத்தை நீங்கள் இவ்வளவு நாட்களாக சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். ஆனால் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் நீர்மூழ்கி கப்பல்களை பாதுகாப்பதில், கருப்பு நிறம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக