இந்தியாவிலேயே முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும் கலக்கி வருகிறது. சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் நடுத்தர மக்களும் வாங்க கூடிய விலையில் கார்களை விற்பனை செய்வதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் மவுசு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.
இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் இருக்கும் சனந் பகுதியில் உள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை கைப்பற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறங்கியது. அங்கு தனது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் திடீர் அறிவிப்பை வெளியிட்டதால், இடையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சற்றே பின்வாங்கியது. ஆனால் தொடர் நஷ்டம் காரணமாக இந்தியாவில் இனி எவ்வித முதலீடுகளையும் செய்யப்போவதில்லை என்ற முடிவுக்கு ஃபோர்டு நிறுவனம் வந்தது.
இதையடுத்த ஃபோர்டு நிர்வாகங்கள் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சனந் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் குஜராத் சட்டமன்றத்தில் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தாகியுள்ளது. சனந்த் வாகன உற்பத்தி ஆலையை கையகப்படுத்த அதன் துணை நிறுவனமான ஃபோர்டு இந்தியாவுடனும், குஜராத் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு ஃபோர்டு இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன் படி உற்பத்தி ஆலையின் நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகன உற்பத்தி ஆலை அதில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் விலைக்கு வாங்க இருக்கிறது. அதன்படி அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களும் விரைவில் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் பணியாற்ற உள்ளனர்.
டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் MD ஷைலேஷ் சந்திரா கூறுகையில், டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் பயணிகள் மற்றும் மின்சார வாகனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் விருப்ப பட்டியலில் இடம் பிடித்து வருவது, எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது. இந்த சாத்தியமான பரிவர்த்தனை திறன் விரிவாக்கத்தை ஆதரிக்கும், இதனால் எதிர்கால வளர்ச்சி மற்றும் பயணிகள் மற்றும் மின்சார வாகனங்கள் இடத்தில் நமது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (TPEML )மற்றும் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் (FIPL) இடையே பரிவர்த்தனை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அதன் பின்னர் TPEML புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது, இது கமிஷன் மற்றும் அதன் வாகனங்களை உற்பத்தி செய்ய யூனிட்டை தயார்படுத்துவதற்கு அவசியமானது. போர்டு இந்தியா உற்பத்தி ஆலையில் பவர்டிரெயின் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பிவி மற்றும் இவி வாகன உற்பத்தியை மேம்படுத்த உள்ளது. சனந்தில் உள்ள Tata Motors Passenger Vehicles Ltd இந்நிறுவனத்திற்கு அருகில் உள்ளதால் உற்பத்திக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத்தின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா, “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து பங்குதாரர்களுக்கும் வெற்றியை பரிசளித்து, சுமூகமான மாற்றத்தை உறுதி செய்கிறது. இந்த முயற்சி குஜராத்தின் முற்போக்கான, முதலீட்டு நட்பு மாநிலம் என்ற பிம்பத்தை வலுப்படுத்துகிறது மற்றும் நாட்டின் முன்னணி வாகன மையமாக மாநிலத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அதன் தீர்மானத்தை வலுப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக