கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேகிணறு என்னும் ஊரில் அருள்மிகு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோவை மாவட்டத்தில் அன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ தொலைவில் மேகிணறு என்னும் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல டவுன் பஸ் வசதியும், அன்னூரிலிருந்து கால் டாக்சி, ஆட்டோ வசதியும் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்குள்ள விநாயகர் சுயம்புவாக உருவானவர். விநாயகருக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது வேறு எந்த விநாயகர் தலங்களிலும் காணாத சிறப்பு.
கருவறையில் ஆதி சுயம்பு விநாயகர் வேண்டியவர்களின் குறைகளை நீக்கி அருட் பலன்களை நிறைவிக்கும் விதமாக அற்புத தரிசனம் தருகிறார். அவருக்கு அருகிலேயே சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும், மூஷிகம், பாலமுருகன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
விநாயகருக்கு வாகனமாய் சன்னதி முன்னே இருக்க வேண்டிய மூஷிகம் இங்கு மற்ற கடவுள்களுடன் சேர்ந்து காட்சி தருவதும், கொழுக்கட்டைப் பிரியனுக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பதும் வேறு எந்த விநாயகர் தலங்களிலும் காணாத சிறப்பு.
மாரியம்மன், சிவன், கன்னிமார் சன்னதிகளும் இருக்கின்றன.
வேறென்ன சிறப்பு?
நவகோள்களின் சன்னதியும் இருக்கிறது. இப்பகுதி மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டால் இந்த கோயிலின் எதிரே அமைந்துள்ள நீண்ட கல்லில் ஒருநாள் முழுவதும் கட்டி வைத்துவிடுகிறார்கள். மறுநாள் அழைத்துச் செல்வதற்குள் அவற்றிற்கு நோய் நீங்கி குணமடைந்துவிடுகிறது. இக்கல்லை கனு மாட்டு வைத்தியக் கல் என அழைக்கின்றனர்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று தரப்படும் அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.
ஆதி சுயம்பு விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி நாளில் நூற்றியெட்டு சிறப்பு பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று இப்பகுதி விவசாயிகள் தங்களது மாடு, கன்றுகளை அழைத்து வந்து பொங்கல் வைத்தும், பூஜை செய்தும் வழிபடுகின்றனர்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
வாழ்வில் வினைகள் விலகவும், சுபகாரியங்கள் கைகூடி சுபிட்சம் பெருகவும், ஆரோக்கியம் நிலைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
பெண்கள் தங்கள் மனம்போல மாங்கல்யம் பெறவும், மகப்பேறு அடைந்திடவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இங்குள்ள விநாயகருக்கு குடம் குடமாக நீர் ஊற்றி விநாயகரை குளிர்வித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக