கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுக்கிரவார்பேட்டை என்னும் ஊரில் அருள்மிகு ராமலிங்க சௌடேஸ்வரி புது சௌடம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சுக்கிரவார்பேட்டை அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்குள்ள அம்மன் சிவனின் நெஞ்சிலிருந்து ஒளியாக தோன்றியதால், இந்த அம்மன் கோயிலில் நந்தி வாகனமாக அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோயில்களிலும், பிரார்த்தனைக்கு பின்னர் தான் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் ஆனால், இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி தான் பிரார்த்தனை செய்வார்கள் மற்றும் வேண்டுதல் வைப்பார்கள்.
கால பைரவர் அஷ்டகம், துக்க நிவாரண அஷ்டகம், காயத்ரி மந்திரம், லட்சுமி நாராயண மந்திரம் பொறிக்கப்பட்ட தனித்தனி கல்வெட்டுகளை அந்தந்த தெய்வங்களுக்குரிய சன்னதிகளில் பதித்திருப்பது பக்தர்களுக்கு பாராயணம் செய்ய வசதியாக உள்ளது.
வேறென்ன சிறப்பு?
சௌடேஸ்வரி அம்மனுக்கும், பாலமுருகனுக்கும் தனித்தனி கொடி மரம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் தென்பகுதியில் ராமலிங்கேஸ்வரர் நந்தியுடன் காட்சி தருகிறார்.
மகாமண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், நவகிரகங்கள், சந்திரன், சூரியன், நால்வர், தேவ மகரிஷி ஆகியோர் உள் பிரகாரத்திலும் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், துர்க்கை போன்றவர்கள் தனிச் சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, ஆடிவெள்ளி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
நவராத்திரி, விஜயதசமி, சித்திரைக்கனி, உள்ளிட்ட விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் போது கோயிலில் உள்ள அம்மனுக்கு ஒரு நாட்களுக்கு ஒரு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது தான் இக்கோயிலில் உள்ள அம்மனிடம் வைக்கப்படும் பிரதான வேண்டுதல் ஆகும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
தொழிலில் வளர்ச்சியடைந்தால், கோயிலில் புதிய கட்டிடங்கள் கட்டியும், கோயில் திருப்பணிகள் செய்தும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். பெரும்பாலும் அதனை நேர்த்திக்கடனாக கருதாமல், கோயில் திருப்பணியாக செய்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக